வரும் 2035-ம் ஆண்டுக்குள் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். வரும் 2040-ம் ஆண்டில் நிலவுக்கு இந்திய வீரர்கள் செல்வார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் நேற்று சர்வதேச விண்வெளி உச்சி மாநாடு தொடங்கியது. இதன் தொடக்க விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: உலகம் ஒரு குடும்பம் என்ற உயரிய கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. உலகத்தின் நன்மைக்காக விண்வெளி துறையில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும். விண்வெளி துறை சார்ந்த ஆய்வுகளின் பலன்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் கிடைக்க வேண்டும். இந்தியாவின் இஸ்ரோ நிறுவனம் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.
மிகக் குறைந்த செலவில் விண்வெளியில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்துவதில் இஸ்ரோ முன்னோடியாக திகழ்கிறது. இந்த சாதனையை ஒட்டுமொத்த உலகமும் வியந்து பார்க்கிறது. விவசாயிகள், மீனவர்களுக்கு தேவையான தகவல்களை இஸ்ரோ வழங்குகிறது. வானிலை முன்னறிவிப்புகளை துல்லியமாக வழங்குகிறது. இயற்கை பேரிடர் காலங்களில் மீட்புப் பணிக்கு தேவையான உதவிகளை வழங்குகிறது.
சுமார் 34 நாடுகளை சேர்ந்த 430-க்கும் மேற்பட்ட செயற்கைக்கோள்கள் இந்திய ராக்கெட்டுகளால் விண்வெளியில் நிலைநிறுத்தப்பட்டு உள்ளன. இந்தியாவுக்கு மட்டுமன்றி ஒட்டுமொத்த உலகத்தின் நன்மைக்காக இஸ்ரோ பணியாற்றி வருகிறது. சந்திரயான் 3 மூலம் நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை இந்தியா பெற்றிருக்கிறது. இஸ்ரோவின் ஆதித்யா எல் 1 மூலம் சூரியன் குறித்த ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 2025-ம் ஆண்டில் இந்திய விண்வெளி வீரர் சுபன்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று சாதனை படைத்தார்.
வரும் 2035-ம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்திய விண்வெளி நிலையம் அமைக்கப்படும். வரும் 2040-ம் ஆண்டில் நிலவுக்கு இந்திய வீரர்கள் பயணம் மேற்கொள்வார்கள். இந்தியாவின் விண்வெளி ஆய்வுகள் ஒட்டுமொத்த மனித குலத்துக்கும் பயன் அளிப்பதாக இருக்கும். இந்திய விண்வெளி துறையில் தனியார் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் எங்களது விண்வெளி துறை அபரிமிதமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த 1960-ம் ஆண்டில் கேரளத்தின் தும்பாவில் இந்தியாவின் முதல் விண்வெளி திட்டம் தொடங்கியது. அப்போது முதலே எங்களது நம்பகமான பங்குதாரராக பிரான்ஸ் விளங்குகிறது. இப்போது விண்வெளி துறையில் இந்தியா, பிரான்ஸ் நாடுகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு அதிகரித்து இருக்கிறது. விண்வெளி துறை சார்ந்த திட்டங்களில் இந்தியாவோடு இணைந்து பிரான்ஸும் இதர நாடுகளும் பயணிக்க அழைப்பு விடுக்கிறேன். நாம் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். மனித குலத்தின் நன்மைக்காக விண்வெளியைப் பாதுகாக்க வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.















