நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்புக்கு மும்மொழி கொள்கையில் இருந்து விலக்கு?

0
14

நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிப்பது தொடர்பான ஆலோசனை விரைவுபடுத்தப்படும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய கல்விக் கொள்கை 2020-ன் அடிப்படையில் மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. இதில், தொடர்புடைய மாநில மொழி, ஆங்கிலம், மற்றும் ஏதாவது ஓர் இந்திய மொழி ஆகிய மூன்று மொழிகள் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட வேண்டும் என தேசிய கல்விக் கொள்கை வலியுறுத்துகிறது.

தேசிய கல்விக் கொள்கையின் இந்த அறிவிப்புக்கு இணங்க, நடப்பு கல்வி ஆண்டு முதலே 6-ம் வகுப்பில் இருந்து மும்மொழி கொள்கை பின்பற்றப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அடுத்த கல்வி ஆண்டில் 7-ம் வகுப்பு வரையிலும், அதற்கு அடுத்த கல்வி ஆண்டில் 8-ம் வகுப்பு வரையிலும் என படிப்படியாக மும்மொழிக் கொள்கை அமல்படுத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது.

தற்போதைய நிலையில், ஒரு சில பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரை மும்மொழிக் கொள்கை பின்பற்றப்பட்டாலும் அதன் பிறகு இரு மொழிக் கொள்கையே பின்பற்றப்படுகிறது.

சிபிஎஸ்இ-ன் மும்மொழிக் கொள்கை அமலாக்கத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடுக்கப்பட்டுள்ளன. தலைமை நீதிபதி சூர்ய காந்த் தலைமையிலான அமர்வில் இந்த வழக்குகள் இன்று விசாரணைக்கு வந்தன.

இந்த வழக்கில் அரசு தரப்பில் ஆஜராகி வந்த கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாட்டி (Aishwarya Bhati) இன்று ஆஜராகாத நிலையில், அவருக்குப் பதில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜரானார்.

மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், “ஆங்கிலத்தை வெளிநாட்டு மொழி பிரிவுக்கு மாற்றுவது குறித்த விவகாரத்தில் நீதிமன்றம் தனது தீர்ப்பை அளிக்க வேண்டும்” என்று கோரினார்.

அப்போது துஷார் மேத்தா, “இது குறித்து அரசுக்கு ஆட்சேபனை உள்ளது. இது குறித்த எங்கள் வாதங்களை முன்வைக்க விரும்புகிறோம். எனினும், தனிப்பட்ட சிரமம் காரணமாக ஐஸ்வர்யா பாட்டியால் இன்று நீதிமன்றத்தில் வாதாட இயலவில்லை. எனவே, விசாரணையை சிறிது காலம் ஒத்திவைக்க வேண்டும்” என்று கோரினார்.

மேலும், நடப்பு கல்வியாண்டில் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு மும்மொழி கொள்கையில் இருந்து ஒருமுறை மட்டும் விலக்கு அளிப்பது தொடர்பான ஆலோசனை விரைவுபடுத்தப்படும் என்று அவர் தெரிவித்தார். இதையடுத்து, விசாரணையை வரும் 17-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

மனுதாரர் தரப்பில் ஆஜரான மற்றொரு மூத்த வழக்கறிஞர் ஆனந்த் குரோவர், பெற்றோர்கள் கவலை அடைந்து வருவதால் இந்த விழக்கில் மேலும் கால அவகாசம் வழங்க் கூடாது என நீதிமன்றத்தை வலியுறுத்தினார்.

முந்தைய விசாரணையின்போது, மும்மொழிக் கொள்கையை இந்த ஆண்டு அமல்படுத்துவதில் இருந்து விலக்கு அளிப்பது குறித்து பரிசீலிக்குமாறு நீதிமன்றம் கேட்டிருந்தது. மும்மொழித் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும் என்று கூறிய நீதிமன்றம், அதேவேளையில் சிபிஎஸ்இ அதன் அமலாக்க முறையை இன்னும் சிறப்பாக சீரமைக்க வேண்டும் என்று தெரிவித்தது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here