“யாருடைய நிழலிலும் இருக்க விரும்பவில்லை” – கம்பீரை மறைமுகமாக சாடினாரா ஸ்ரேயஸ் ஐயர்?

0
24

இந்திய டி20 கிரிக்கெட் அணியின் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ள ஸ்ரேயஸ் ஐயர், தனது புதிய பொறுப்பு குறித்து மனம் திறந்துள்ளார். தலைமைப் பொறுப்பு என்பது தனக்குக் கிடைத்த ஒரு சிறந்த சவால் என்று குறிப்பிட்டுள்ள அவர், யாருடைய நிழலிலும் ஒடுங்கிப் போகாமல், எப்போதும் தனக்கே உரித்தான தனித்துவமான பாணியில் அணியை வழிநடத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய ஸ்ரேயஸ் ஐயர், தனது சிறுவயது கிரிக்கெட் பயணத்தையும், மும்பையின் கடுமையான போட்டிச் சூழல் தனக்குக் கொடுத்த பக்குவத்தையும் பகிர்ந்துகொண்டார். அதில் பேசிய அவர் “மும்பையில் பிறந்து வளர்ந்ததால் சவால்களை எதிர்கொள்வது எனக்குப் பழகிவிட்டது. அங்கு கிரிக்கெட் என்பது ஒரு மதம் போன்றது; தெருவில் விளையாடும் ஒவ்வொரு குழந்தையும் மும்பை அணிக்காக ஆட வேண்டும் என்றே விரும்பும்.

அதனால் எனது மனநிலை எப்போதும் சவால்களை வெல்வதைப் பற்றியதாகவே இருந்தது. தற்போது கேப்டன் பதவி என்ற பெரிய பொறுப்பு கிடைத்துள்ள போதிலும், இதற்காக நான் எனது குணத்தையோ அல்லது அணுகுமுறையையோ மாற்றிக்கொள்ளப் போவதில்லை. யாருடைய நிழலிலும் செயல்பட மாட்டேன்” என்று தெரிவித்துள்ளார்.

ஸ்ரேயஸ் ஐயர் குறிப்பிட்டுள்ள இந்த ‘நிழல்’ என்ற வார்த்தை, இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீரை மறைமுகமாக குறிப்பதாக விவாதங்கள் கிளம்பியுள்ளன. கடந்த 2024 ஐபிஎல் தொடரில் ஸ்ரேயஸ் ஐயரின் தலைமையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி கோப்பையை வென்ற போதிலும், அதற்கான ஒட்டுமொத்த பெருமையும் கம்பீருக்கே உரியது என்று பலரும் பாராட்டினர். இதனால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே ஸ்ரேயஸ் கொல்கத்தா அணியை விட்டு விலகி, பஞ்சாப் கிங்ஸ் அணியில் இணைந்ததாகக் கூறப்பட்டது. தற்போது இருவரும் மீண்டும் இந்திய அணியில் இணைந்துள்ள நிலையில், ஸ்ரேயஸின் இந்த பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2023 டிசம்பருக்குப் பிறகு இந்திய டி20 அணியில் இடம் பெறாமல் இருந்த ஸ்ரேயஸ் ஐயர், மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார். 2024-ல் கேகேஆர் அணிக்குக் கோப்பை, 2025-ல் பஞ்சாப் அணியை இறுதிப்போட்டி வரை அழைத்துச் சென்றது மற்றும் 2026 ஐபிஎல் தொடரில் 168.81 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் 498 ரன்கள் குவித்தது என அவரது சமீபத்திய ஃபார்ம் மிகச் சிறப்பாக உள்ளது.

இதன் காரணமாகவே, டி20 உலகக் கோப்பையை வென்று கொடுத்த சூர்யகுமார் யாதவை நீக்கிவிட்டு, அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு ஸ்ரேயஸ் ஐயரை புதிய கேப்டனாக அறிவித்துள்ளது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியின் கேப்டனாகத் தனது முதல் பயணத்தை வரவிருக்கும் அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து டி20 தொடர்களில் இருந்து தொடங்கவுள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here