ஸ்யேரஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி 3 டி20 கிரிக்கெட் ஆட்டங்கள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக ஜிம்பாப்வே சென்றுள்ளது. இந்தத் தொடரின் முதல் ஆட்டம் இன்று மாலை 4.30 மணிக்கு ஹராரேவில் நடைபெறுகிறது.
ஸ்ரேயஸ் ஐயர் கேப்டனாக பொறுப்பேற்றதில் இருந்து இந்திய அணி இதுவரை ஒரு டி 20 ஆட்டத்தில் கூட வெற்றி பெறவில்லை. சமீபத்தில் அயர்லாந்துக்கு எதிராக நடைபெற்ற டி 20 தொடரை 0-2 என்ற கணக்கிலும், இங்கிலாந்துக்கு எதிரான டி 20 தொடரை 0-4 என்ற கணக்கிலும் இந்திய அணி இழந்திருந்தது. இந்த சூழ்நிலையில்தான் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இருதரப்பு டி 20 தொடரை சந்திக்கிறது இந்திய அணி. இந்த தொடரின் முடிவு இந்திய அணிக்கு சாதகமாக இருக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது..
சஞ்சு சாம்சன் இந்த தொடருக்கு தேர்வு செய்யப்படாததால் சூர்யவன்ஷி அனைத்து ஆட்டங்களிலும் அபிஷேக் சர்மாவுடன் களமிறங்குவார். இன்றைய போட்டி நடைபெறும் ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், அபிஷேக் சர்மா, சூரியவன்ஷி ஆகிய இருவருக்குமே ராசியானது. அபிஷேக் சர்மா இந்த மைதானத்தில்தான் டி 20 போட்டியில் அறிமுகமாகி இருந்தார். அப்போது நடைபெற்ற தொடரின் 2-வது ஆட்டத்தில் அபிஷேக் சர்மா சதம் விளாசியிருந்தார்.
சூர்யவன்ஷியைப் பொறுத்தவரை, இந்த ஆண்டின் தொடக்கத்தில் இளையோர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இங்கிலாந்து யு-19 அணிக்கு எதிராக சதத்தை விளாசியிருந்தார். இதனால் இவர்களிடம் இருந்து சிறந்த மட்டை வீச்சு வெளிப்படக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஸ்ரேயஸ் ஐயர், இஷான் கிஷன், திலக் வர்மா, ரிங்கு சிங், ஷிவம் துபே ஆகியோரும் பொறுப்புடன் செயல்பட வேண்டிய கட்டத்தில் உள்ளனர்.
இது ஒருபுறம் இருக்க ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தின் ஆடுகளத்தில் பிற்பகலில் நடைபெறும் போட்டிகளில் பந்துகள் வேகமாக எகிறி வரும். இதனால், கால்களின் நகர்வுகளை பயன்படுத்தி விளையாடாத இந்திய பேட்ஸ்மேன்கள் கடும் சவால்களை சந்திக்க நேரிடும். இந்த வகையில், ஜிம்பாப்வே அணியின் வேகப்பந்து வீச்சாளர்களான பிளெஸ்ஸிங் முசரபானி, ரிச்சர்ட் நகரவா ஆகியோர் தொடக்க ஓவர்களில் அழுத்தம் கொடுக்க வாய்ப்பு உள்ளது.
இந்திய அணியின் பந்துவீச்சு துறை மயங்க் யாதவ், அசோக் சர்மா, பிரின்ஸ் யாதவ், யாஷ் தாக்கூர் ஆகிய இளம் வேகப்பந்து வீச்சாளர்களை நம்பி களமிறங்குகிறது. சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் களமிறங்கக்கூடும்.















