‘‘ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, பாகிஸ்தானின் 13 போர் விமானங்கள், 11 விமானப்படை தளங்களை இந்தியப் படைகள் அழித்தது’’ என்று விமானப்படை தெரிவித்துள்ளது. காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது பாகிஸ்தான் தீவிரவாதிகள் கடந்த ஆண்டு நடத்திய தாக்குதலில் 26 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக இந்திய ராணுவம் கடந்தாண்டு மே மாதம் 7-ம் தேதி ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை தொடங்கியது. இதன் முதலாம் ஆண்டு தினம் நேற்று நினைவு கூரப்பட்டது.
இதுகுறித்து விமானப்படை துணைத் தளபதி ஏர் மார்ஷல் அவதேஷ் குமார் பாரதி அளித்த பேட்டியில் கூறியதாவது: கடந்த ஆண்டு மே 7-ம் தேதி மேற்கொண்ட ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாக். எல்லையில் உள்ள 9 தீவிரவாத முகாம்களை அழித்தோம். பாகிஸ்தானின் 11 விமானப்படை தளங்கள், 13 போர் விமானங்களும் அழிக்கப்பட்டன.
இதில் ரேடார் விமானம் ஒன்று 300 கி.மீ தூரத்துக்கும் அப்பால் வந்தபோதே தகர்க்கப்பட்டது. இதற்கான ஆதாரங்களை அனைவரும் பார்க்கலாம். ஆனால், பாகிஸ்தான் தரப்பில் இந்தியா மீது குறிப்பிடத்தக்க பாதிப்பை ஏற்படுத்த முடியவில்லை. ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தான் கூறியதெல்லாம் தவறான தகவல். இந்திய ராணுவ கட்டமைப்பு ஏதுவும் சேதமடையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.
ராணுவ துணைத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் ராஜீவ் காய் நேற்று கூறியதாவது: தற்சார்பு இந்தியா என்பது வெறும் முழக்கம் மட்டுமல்ல, அது உண்மையாகவே இந்தியாவின் ஆற்றல் பல மடங்கு சக்தி வாய்ந்தது என்பதை நிருபித்தது. இந்தியாவின் ஆயுதங்களில் கடாக், ஐஎஸ்ஆர் ட்ரோன்கள் உட்பட 65 சதவீதத்துக்கும் அதிகமானவை இப்போது உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகின்றன.
ஆபரேஷன் சிந்தூர் ஒரு நீண்ட காலப் போராக மாறாமல், குறுகிய காலத்துக்குள் அதன் இலக்குகள் துல்லியமாக எட்டப்பட்ட ஒரு கச்சிதமான நடவடிக்கை. ஆபரேஷன் சிந்தூர் முடிவு அல்ல, ஒரு தொடக்கம். நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பை இந்தியா உறுதியுடன் பாதுகாக்கும். நாம் குறுகிய காலத்தில் இலக்குகளைப் பலமாகத் தாக்கினோம். இதனால்தான் பாகிஸ்தான் தாக்குதலை நிறுத்தக் கோரிய போது, நாம் போரை நிறுத்த முடிவு செய்தோம்.
துல்லியமான இலக்குகளைத் தாக்க தேவையான சரியான தகவல்களை உளவுத் துறை வழங்கியது. சைபர் பிரிவு தகவல் ஆதிக்கத்தைப் பராமரித்தது. சர்வதேச சூழலையும், உள்நாட்டுப் பாதுகாப்பையும் மத்திய அரசு திறம்பட கையாண்டது. குறைந்த சேதங்களுடன் ஆபரேஷன் சிந்தூர் மிகவும் துல்லியமாக நடத்தப்பட்டது. பல பாதுகாப்பு அமைப்புகளை இணைத்து செயல்பட்ட இந்த முறை எதிர்கால நடவடிக்கைகளுக்கு ஒரு முன்மாதிரியாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.
எக்ஸ் தளத்தில் படங்கள் மாற்றம்
ஆபரேஷன் சிந்தூர் முதலாம் ஆண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர்கள் ஆகியோர் எக்ஸ் தளத்தில் தங்களது சுயவிவர படத்தை ஆபரேஷன் சிந்தூர் லோகோவுடன் வெளியிட்டனர்.
இதுகுறித்து பிரதமர் எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள செய்தியில், ‘‘ஓர் ஆண்டுக்கு முன்பு இதே தினத்தில் நமது ராணுவம் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டு துல்லிய தாக்குதல் நடத்தி ஈடுயிணையற்ற வீரத்தை வெளிப்படுத்தியது. பஹல்காமில் அப்பாவிகளைக் கொன்ற வர்களுக்குத் தக்க பதிலடி கொடுத்தனர். அவர்களின் வீரத்தை நாடு போற்றுகிறது’’ என குறிப்பிட்டுள்ளார். இதேபோல் மத்திய அமைச்சர்கள் ஜெய்சங்கர், அமித் ஷா, ராஜ்நாத் சிங், கிரண் ரிஜிஜூ உட்பட பலர் சமூக ஊடகத்தில் சுயவிவரப் படங்களை ஆபரேஷன் சிந்தூர் படங்களுடன் மாற்றினர்.















