விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்கு இணைந்த கைகள்

0
351

அகமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு சேவை செய்வதற்காக வெவ்வேறு சித்தாந்தங்களைக் கொண்டவர்கள் ஒன்றாக இணைந்தனர்.

குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து கடந்த 12-ம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் அடுத்த சில நிமிடங்களில் அப்பகுதியில் இருந்த மருத்துவக் கல்லூரி மாணவர் விடுதியின் மீது விழுந்து எரிந்து சாம்பலானது. இதில் பயணித்த ஒருவர் தவிர 241 பேரும் தீயில் கருகி உயிரிழந்தனர். அத்துடன் அந்தப் பகுதியில் இருந்த சுமார் 30 பேர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இதனிடையே, உயிரிழந்தவர்களின் உடல்களை டிஎன்ஏ பரிசோதனை மூலம் அடையாளம் காணும் பணி நடைபெறுகிறது. இதில் சிலரின் உடல்கள் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. எனினும், அனைத்து டிஎன்ஏ மாதிரி முடிவுகளும் வெளியிடப்படவில்லை. சில சம்பிரதாயங்கள் காரணமாக அனைவரின் உடல்களையும் ஒப்படைக்க சில நாட்கள் ஆகும் என கூறப்படுகிறது.

இதனால் உடல்களைப் பெறுவதற்காக உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி உள்ளது. எனவே, பிரேதப் பரிசோதனை அறைக்கு அருகில் ஆர்எஸ்எஸ், அதன் சகோதர அமைப்புகள் மற்றும் ஜாமியத்-இ-உலமா ஹிந்த் உள்ளிட்ட வெவ்வெறு சித்தாந்தங்களைக் கொண்ட அமைப்பினர் இணைந்து கூடாரம் அமைத்து, காத்திருக்கும் உறவினர்களுக்கு உணவு மற்றும் பானங்களை விநியோகித்து வருகின்றனர்.

ஒரே கூரையின் கீழ் உணவுப் பொருள் விநியோகம் செய்யப்பட்டபோது, அக்சர்தாம் கோயில் தீவிரவாதத் தாக்குதல் வழக்கின் முன்னாள் குற்றவாளியைக் காண முடிந்தது. குஜராத் நீதிமன்றங்களால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது, ஆனால் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் அவர் விடுவிக்கப்பட்டார்.

இதுமட்டுமல்லாமல், 2002 குல்பர்க் சொசைட்டி படுகொலை வழக்கின் முன்னாள் குற்றவாளியும் அங்கு இருந்தார். இவர் உணவுப் பொருட்களை வழங்கிய குழுக்களின் தலைவர்களில் ஒருவர் ஆவார். பாஜக பிரமுகரான அவர் குல்பர்க் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு, எஸ்ஐடி நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here