மயிலாடுதுறை மாவட்டத்தில் மழைநீரில் மூழ்கிய 2,000 ஏக்கர் சம்பா பயிர்கள்

0
26

மயிலாடுதுறை மாவட்டத்தில் நிகழாண்டு 1.60 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை, குத்தாலம், தரங்கம்பாடி, சீர்காழி பகுதிகளில் காவிரி நீர் உரிய நேரத்தில் கிடைக்காததால், பம்புசெட் நீரை நம்பி விவசாயிகள் செப்டம்பர் முதல் வாரத்தில் விதைப்பு மற்றும் நடவுப் பணிகளை மேற்கொண்டனர்.

மேட்டூர் அணையில் இருந்து செப்.1-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டபோதும், கடைமடை பகுதிகளுக்கு செப்.20-ம் தேதிக்கு பிறகே தண்ணீர் வந்தது.

மேலும், காவிரி மற்றும் கிளை ஆறுகளில் இருந்து பிரியும் ஏ, பி பிரிவு வாய்க்கால்களில் போதிய தண்ணீர் திறக்கப்படாததால், தரங்கம்பாடி, சீர்காழி கடலோர கிராமங்களில் பல விவசாயிகள் மழையை நம்பி புழுதி வயல்களில் நேரடி நெல் விதைப்பில் ஈடுபட்டனர்.

விதைத்த நெல்மணிகள் முளைத்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் வயல்களில் தண்ணீர் தேங்கியுள்ளது.

இதனால் தாழ்வான பகுதிகளில் நேரடி விதைப்பு மற்றும் இயந்திர நடவு மூலம் பயிரிடப்பட்ட இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

பல இடங்களில் வடிகால் மற்றும் பாசன வாய்க்கால்கள் முறையாக தூர் வாரப்படாததால் மழைநீர் வெளியேறுவதில் தாமதம் ஏற்பட்டு, பயிர்கள் அழுகும் அபாயம் உள்ளது.

திருவிழந்தூர், பாண்டூர், கீழமருதாந்தநல்லூர், கஞ்சாநகரம், தரங்கம்பாடி, சீர்காழி, கொள்ளிடம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் 2,000 ஏக்கர் இளம் சம்பா பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன.

எனவே, வேளாண்மை மற்றும் நீர்வளத் துறை அதிகாரிகள் தாழ்வான வயல்களை நேரில் ஆய்வு செய்து, மழைநீரை வெளியேற்ற உரிய வடிகால் வசதிகளை ஏற்படுத்தினால்தான் சம்பா பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here