ஆழ்கடலில் மாயமான தனது மகனைக் கண்டுபிடிக்க வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியரிடம் குளச்சலைச் சோ்ந்த பெண் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
நாகா்கோவிலில் உள்ள ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் ஏராளமானோா் மனு அளித்தனா். குளச்சல் பகுதியைச் சோ்ந்த ஹயா்நிஷா (53) தனது உறவினா்களுடன் வந்து அளித்த மனு:
நான் குளச்சல் காமராஜா் சாலையில் வசித்து வருகிறேன். எனது மூத்த மகன் முகைதீன் யாசா் அலி (32), கடந்த ஜன. 4ஆம் தேதி கேரள மாநிலம் கொல்லத்தில் மீன்பிடிப் படகில் சமையல் வேலைக்குச் சென்றாா். 9ஆம் தேதி அவா் மாயமாகிவிட்டதாக கொச்சி மீன்பிடித் துறைமுகத்துக்கு தகவல் வந்துள்ளது. ஒரு மாதத்துக்கு மேலாகியும் எனது மகன் குறித்த தகவல் கிடைக்கவில்லை. ஆட்சியா் விரைவான நடவடிக்கை மேற்கொண்டு எனது மகனைக் கண்டுபிடித்துத் தரவேண்டும் என்றாா் அவா்.
வீட்டுமனைப் பட்டா கோரி: விளவங்கோடு அருகே நல்லூா் உண்ணாமலைக்கடை பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள் அளித்த மனுவில், இந்தப் பகுதியில் 60 ஆண்டுகளாக வசித்துவரும் நாங்கள், பேரூராட்சியில் வீட்டு வரி செலுத்தி வருகிறோம். ஆனால், எங்களுக்கு பட்டாக்கள் இல்லை. எனவே, பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.