செங்கடலில் ‘ஆதிக்கம்’ செலுத்தும் ஏமனின்

0
22

வறுமையும் பசியும் வறண்ட நிலப்பரப்பும் கொண்ட ஒரு தேசத்தில் இருந்து உருவெடுத்த ஒரு சக்தி, சர்வதேச வர்த்தகத்தின் நரம்பு மண்டலமான செங்கடலையே முடக்கும் என்று உலக அரசியல் வல்லுநர்கள் கணித்திருக்க மாட்டார்கள். ஏமனின் வடமேற்கு மலைப் பகுதிகளில் தங்களின் பண்பாட்டு அடையாளத்தைப் பாதுகாக்க உருவெடுத்த ‘அன்சார் அல்லாஹ்’ (ஹவுதிகள்) இயக்கம் இன்று வல்லரசுகளையே திணற வைக்கிறது.

ஏமனின் வரலாறு 1,000 ஆண்டுகளுக்கும் மேலானது. வடமேற்கு சடா மாகாணத்தில் வாழும் ‘ஜைதி’ இஸ்லாமியர்களின் வரலாற்றுப் பின்னணியில் இந்த இயக்கம் பிறந்தது. ஏமன் மக்கள் தொகையில் 35 சதவீதம் ஜைதிக்கள். சடா மாகாணத்தில்தான் பெரும்பாலான ஜைதி மக்கள் வசிக்கிறார்கள்.

ஏமன் காலம் காலமாக அங்குள்ள ‘ஜைதி இமாமத்’ ஆட்சியில் இருந்தது. 1962-ல் ஏற்பட்ட குடியரசு புரட்சியால் ஜைதிகளின் அரசியல் அதிகாரம் பறிபோனது. 1990-களில் சவூதி அரேபியாவின் ஆதரவோடு வஹாபிசக் கருத்துகள் பரவியபோது, தங்கள் பாரம்பரிய ஜைதி அடையாளத்தைக் காக்க 1992-ல் ஹுசைன் பத்ருத்தீன் அல்-ஹவுதி ‘இளைய விசுவாசிகள்’ என்ற அமைப்பைத் தொடங்கினார்.

2003 ஈராக் போரின்போது ஏமன் அரசின் அமெரிக்க ஆதரவு நிலைப்பாட்டைக் கண்டித்து மக்களைத் திரட்டி ஹுசைன் போராடினார். 2004-ல் ஏமன் ராணுவம் அவரை சுட்டுக் கொன்றது. அவரது நினைவாக இந்த இயக்கம் ‘ஹவுதிகள்’ எனப் பெயர் பெற்றது.

ஹுசைனுக்குப் பின் அப்துல் மாலிக் அல்-ஹவுதி தலைவரானார். பழங்குடிகள் கட்டமைப்பையும் நவீன ஏவுகணைத் தொழில்நுட்பத்தையும் இணைத்த இந்த இயக்கம், வெறும் ஆயுதக் குழுவாக மட்டும் இல்லாமல், புறக்கணிக்கப்பட்ட மக்களின் அதிகார மையமாகவும் உருவெடுத்தது.

இதை ஒரு சாதாரண ஆயுதக் குழுவின் கதையாகப் பார்க்காமல், பிராந்தியப் புறக்கணிப்பு, மத அடையாளம் மற்றும் புவிசார் அரசியல் முரண்பாடுகளுக்கு இடையே அடையாளத்தை இழந்து, மீண்டும் அடையாளத்தைத் தேடி எழுச்சிபெற்ற ஓர் அதிகார மையத்தின் கதையாகப் பார்க்க வேண்டும்.

ஈரானின் ‘எதிர்ப்பு அச்சு’

மேற்கத்திய எதிர்ப்பு, இஸ்ரேல் மற்றும் அமெரிக்க எதிர்ப்பு ஆகியவை ஹவுதிகளின் முதன்மையானச் சித்தாந்தம். மத்திய கிழக்கில் ஈரான் தலைமையிலான ‘எதிர்ப்பு அச்சில்’ (Axis of Resistance) ஹவுதிகள் இணைந்துள்ளனர். ராணுவ ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் ஈரானின் நெருங்கிய கூட்டாளியாகச் செயல்பட்டாலும், தங்கள் தனித்துவமான ஜைதி இஸ்லாமிய வேர்களை இவர்கள் இழக்கவில்லை.

ஹவுதிகளுக்கு ஆதரவு அளிப்பது, போர்ப் பயிற்சி அளிப்பது, ஆயுதங்கள் சப்ளை செய்வது என அனைத்திலும் முதன்மையாக இருப்பது ஈரான்தான். ஹவுதிகள் பயன்படுத்தும் பல ஏவுகணைகள், டேங்க் எதிர்ப்பு ஏவுகணைகள் மற்றும் தற்கொலை ட்ரோன்கள் ஈரானில் வடிவமைக்கப்பட்டவை என்று அமெரிக்கா, சவூதி அரேபியா, இஸ்ரேல் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை குற்றம்சாட்டுகின்றன. ஆனால் இதை ஈரான் தொடர்ந்து மறுத்து வருகிறது.

2015-ம் ஆண்டில் 30,000 ஆக இருந்த ஹவுதி படையினரின் எண்ணிக்கை, 2024-ம் ஆண்டில், ஐ.நா. அறிக்கையின்படி 3.50 லட்சமாக உயர்ந்துள்ளது. வடகொரியா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளும் ஈரான் வழியாக இவர்களுக்கு உதவுவதாகக் கூறப்படுகிறது.

அதிகாரத்தைக் கைப்பற்றிய விதம்

ஹவுதிகளுக்கும் ஏமன் அரசுக்கும் இடையிலான மோதல் திடீரென உருவானது இல்லை. அது மதம், பொருளாதாரம், அரசியல் மற்றும் புவிசார் அரசியல் ஆகிய நான்கு பின்னணிகளைக் கொண்டது.

1980–90-களில் அதிபர் அலி அப்துல்லா சலேயின் ஊழல் மலிந்த ஆட்சியில் ஜைதிகளுக்கு அரசுப் பணிகளிலும், ராணுவத்திலும் உரிய பிரதிநிதித்துவம் மறுக்கப்பட்டது. அவர்கள் வாழும் சடா மாகாணமும் அரசால் புறக்கணிக்கப்பட்டது. ஜைதி தலைவர் ஹுசைன் ஹவுதியை ராணுவம் சுட்டுக் கொன்றது.

அதன்பின் 2004 முதல் 2010 வரை நடந்த 6 உள்நாட்டுப் போர்களிலும் ஹவுதிக்களை ஏமன், சவூதி அரேபிய கூட்டுப் படைகளால் அழிக்க முடியவில்லை.

2011-ம் ஆண்டு மக்கள் புரட்சியில் சலேவின் ஆட்சியை வீழ்த்திய ஹவுதிகள், பின்னணியில் நடந்த அரசியல் மாற்றங்களைப் பயன்படுத்தித் தலைநகர் சனாவைக் கைப்பற்றினர்.

இவர்களைத் தடுக்க 2015-ல் சவூதி அரேபியா தலைமையிலான 9 நாடுகள் போரைத் தொடங்கின. இருப்பினும், 8 ஆண்டு தாக்குதல் நடத்தியும் ஹவூதிகளை அழிக்க முடியவில்லை. இன்று ஏமனின் 80 சதவீதம் மக்கள் வாழும் வடமேற்குப் பகுதிகள் மற்றும் முக்கியத் துறைமுகமான அல்-ஹுதைதாவைத் ஹவுதிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர்.

செங்கடலில் ஆதிக்கம்

2023-ம் ஆண்டு காசா போர் தொடங்கியதும், பாலஸ்தீனத்துக்கு ஆதரவாகச் செங்கடலில் செல்லும் மேற்கத்தியக் கப்பல்கள் மீது ஹவுதிகள் தாக்குதல் நடத்தத் தொடங்கினர். 2025-ல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தாக்குதல்களைத் தீவிரப்படுத்த உத்தரவிட்டார். அமெரிக்கக் கப்பல்கள் மீதான தாக்குதலை மட்டுமே ஹவுதிகள் நிறுத்தினர். ஆனால், இஸ்ரேலை குறிவைப்பதை நிறுத்தவில்லை.

அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளாலும் செங்கடலில் ஹவுதிகளின் ஏவுகணைத் தாக்குதல்களை முழுமையாக தடுத்து நிறுத்த முடிவதில்லை. சில ஆயிரம் டாலர் மதிப்புள்ள ஹவுதிகளின் மலிவு விலை ட்ரோன்களை வீழ்த்த, அமெரிக்கா கோடிக்கணக்கான டாலர் மதிப்புள்ள ‘பேட்ரியாட்’ ஏவுகணைகளைப் பயன்படுத்தியது. இது அமெரிக்காவுக்கு பெரும் நிதிச்சுமையை உருவாக்கியுள்ளது.

உலகப் பொருளாதார தாக்கம்

உலகின் மொத்த கடல்வழி வர்த்தகத்தில் 15 சதவீதம் மற்றும் கன்டெய்னர் வர்த்தகத்தில் 30 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவே நடைபெறுகிறது. ஹவுதிகளின் தாக்குதலால் கப்பல்கள் எகிப்து வழியாக செல்வதைத் தவிர்த்து, ஆப்பிரிக்காவின் ‘நம்பிக்கை முனை’ வழியாகச் சுற்றிச் செல்கின்றன. இதனால், பயண நேரம் 10 முதல் 14 நாட்கள் அதிகரித்து, போக்குவரத்து செலவும் காப்பீட்டுக் கட்டணமும் உயர்ந்துள்ளது.

எகிப்து நாட்டின் அந்நியச் செலாவணி பாதிக்கப்பட்டு பெரும் பொருளாதார நெருக்கடியைச் சந்தித்துள்ளது. மூலப்பொருட்கள் தாமதமானதால் ஐரோப்பிய நாடுகளில் டெஸ்லா, வால்வோ போன்ற பெருநிறுவனங்களின் உற்பத்தி பாதிக்கப்பட்டன. பொருட்களின் விலை உயர்ந்து உலகளவில் பணவீக்கம் அதிகரித்துள்ளது.

சூயஸ் கால்வாய் பயன்பாடு குறைந்ததால் எகிப்து நாட்டின் அன்னியச் செலாவணி 60 சதவீதம் வரை சரிவடைந்துள்ளது. கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகம் பாதிக்கப்பட்டுச் சர்வதேசச் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவுகிறது.

ஒரு பிராந்திய ஆயுதக் குழு, எளிய ஆயுதங்களைக் கொண்டு உலக வர்த்தகத்தின் பெரும் பகுதியை முடக்கி, வல்லரசுகளின் பொருளாதாரத்தையே ஆட்டிப் படைக்க முடியும் என்பதை ஏமனின் ஹவுதிகள் நிரூபித்துள்ளனர்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here