அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் கார் வழங்க முதல்வரிடம் கோரிக்கை வைத்தது ஏன்? – எம்எல்ஏ ஜோதிமணி விளக்கம்

0
20

கடலூர் மாவட்டம், காட்டுமன்னார்கோவில் எம்எல்ஏ ஜோதிமணி கடந்த 12-ம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் பேசுகையில், “பொருளாதார வசதி இல்லாததால் என்னிடம் கார் இல்லை. அதனால் வாடகைக்கு வாகனம் எடுத்தே தொகுதியில் செல்ல வேண்டியுள்ளது. என்னைப்போல பல எம்எல்ஏக்களின் நிலையும் இப்படித்தான் இருக்கிறது. அரசு இதனை கவனத்தில் கொண்டு உறுப்பினர்களுக்கு கார் மற்றும் உதவியாளர் வழங்க வேண்டும்” என்று கோரினார்.

இதையேற்று நேற்று சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் விஜய், அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களுக்கும் அரசு சார்பில் வாகனம் வழங்குவதாக அறிவித்தார். இதற்காக உரிய சட்டத்திருத்தங்கள் மேற்கொண்டு ஆணைகள் வெளியிடப்படும் என்றார். முதல்வரின் இந்த அறிவிப்பை ஜோதிமணி எம்எல்ஏ உட்பட பலரும் வரவேற்றனர்.

ஆனால், 2026 சட்டப்பேரவை தேர்தலில் கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் தொகுதியில் விசிக வேட்பாளராக போட்டியிட்ட ஜோதிமணி, தனது வேட்பாளர் உறுதிமொழி பத்திரத்தில் தனக்குச்சொந்தமாக ரூ.9 லட்சம் மதிப்புடைய கார் (டி.என்.31 ஏ.எம். 3632) ஒன்று இருப்பதாக தெரிவித்துள்ளார். இந்த கார் கடந்த 2012-ம் ஆண்டு முழுத்தொகையையும் பணமாக கொடுத்து வாங்கப்பட்டுள்ளதாகவும், இன்று வரை ஜோதிமணி எம்எல்ஏ பெயரிலேயே அந்தக் கார் உள்ளதாகவும் வாகனத்தின் ஆவணங்களில் உள்ளது.

இதுகுறித்து காட்டுமன்னார்கோவிலைச் சேர்ந்த அரசியல் கட்சியினர் சிலர் கூறும்போது, சமீபத்தில் அந்தக்காரை அவர் விற்று விட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இதனிடையே இந்த விவாகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஜோதிமணி, எம்எல்ஏக்களுக்கு கார் வழங்க வேண்டும் என்ற எனது கோரிக்கையை முதல்வர் ஏற்று அறிவிப்பு வெளியிட்டதற்கு நன்றி. அதுபோல என்னிடம் உள்ள கார் வாங்கி 15 ஆண்டு ஆகிவிட்டது. தற்போது உபயோகத்தில் இல்லாமல் உள்ளது. அதை விற்கவில்லை.

லோன் போட்டு கார் வாங்க ஆசை. ஆனால் எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்று வங்கியில் லோன் தர மறுக்கிறார்கள். அதனால் முதல்வரிடம் புதிய கார் வழங்குமாறு கேட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here