பாரி இளவழகன் இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ‘அன்பே டயானா’. ரம்யா ரங்கநாதன், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி, இஸ்மத் பானு என பலர் நடித்துள்ள இப்படத்துக்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார்.
நியோ கேசில் கிரியேஷன்ஸின் சத்யா கரிகாலன், மில்லியன் டாலர் ஸ்டூடியோஸின் யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இப்படம் கடந்த 17-ம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இதன் வெற்றி விழா சென்னையில் நடைபெற்றது. படக் குழுவினர் கலந்து கொண்டனர்.
விழாவில் இயக்குநர் பாரி இளவழகன் பேசும்போது, “நான் இயக்கி நடித்த ‘ஜமா’ படத்தைத் தொடர்ந்து இப்படத்துக்கும் ஆதரவளித்த ரசிகர்களுக்கு நன்றி. இந்தப் படத்தை நான் இயக்க வேண்டும் என்ற உறுதியுடன் ஆரம்பம் முதலே தயாரிப்பாளர் யுவராஜ் கணேசன் என் மீது வைத்த நம்பிக்கையே இந்த வெற்றிக்குக் காரணம். ஓர் இயக்குநருக்கு தனது எழுத்தின் மீது தயாரிப்பாளர் முழுமையான நம்பிக்கை வைப்பது மிகப்பெரிய வரம்.
‘அன்பே டயானா’ படத்தில் நான் எழுதிய வசனத்தையோ, காட்சியையோ மாற்ற வேண்டும் என்று அவர் கூறவில்லை. என் எழுத்தையும், என் பார்வையையும் முழுமையாக நம்பி முழு சுதந்திரம் அளித்தார். இந்தப் படத்தின் கதாபாத்திரங்கள் குறித்து நான் ஆரம்பத்திலிருந்தே தெளிவாக இருந்தேன். எந்தக் கதாபாத்திரத்தில் யார் நடிக்க வேண்டும் என்ற நம்பிக்கையும் உறுதியாக இருந்தது. அந்த நம்பிக்கையை தயாரிப்பாளர் முழுமையாக மதித்தார்.
‘அன்பே மேஜிக் என்று தலைப்பு வைக்காமல் அன்பே டயானா என்று ஏன் வைத்தீர்கள் ? என்று என்னிடம் பலர் கேட்டார்கள். ‘மேஜிக்’ என்ற வார்த்தை படத்தின் உள்ளே மட்டுமே சிறப்பாக ஒலிக்க வேண்டும் என்பதற்காகத்தான் தலைப்பாக வைக்கவில்லை. கதை எழுதும்போதே அந்த வார்த்தை ரசிகர்களிடம் பெரிய அளவில் பேசப்படும் என்று நம்பினேன். இன்று ரசிகர்கள் அந்தக் கதாபாத் திரத்தை ‘மேஜிக்’ என்றே கொண்டாடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்றார்.















