காமெடி நடிகராக திரைப் பயணத்தைத் தொடங்கி, கதாநாயகனாகப் பரிணமித்துள்ள நடிகர் சூரியின் வளர்ச்சி அசாத்தியமானது. ‘விடுதலை’, ‘கருடன்’, ‘கொட்டுக்காளி’, ‘மாமன்’ என அடுத்தடுத்து வெற்றிப் படங்களை கொடுப்பது மட்டுமின்றி, தனது கதைத் தேர்விலும் வியக்க வைக்கிறார். அந்த வரிசையில், மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில், தமிழ் சினிமாவில் இதுவரை அதிகம் பார்த்திராத பாரம்பரியப் படகுப் போட்டியை மையமாகக் கொண்டு உருவாகியிருக்கும் ‘மண்டாடி’ திரைப்படம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம்.
ராமநாதபுரத்தின் கடலோர கிராமமான முகவைப்பட்டினத்தில் மாரி (மிதுன் ஜெய் சங்கர்) என்ற இளைஞர், சாட்டப்புலி என்பவரையும் (சுஹாஸ்) அவரது மகனையும் கொடூரமாகத் தாக்குகிறார். ஆனால், கோயில் திருவிழாவில் ஏற்படும் அமளி காரணமாக சாட்டப்புலி தப்பித்துவிட, அவரைக் கொல்லும் மாரியின் முயற்சி தடைபடுகிறது. படகுப் போட்டியையும், அணிகளையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் செல்வாக்குமிக்க சாட்டப்புலி, மாரியைப் பழிவாங்கும் முயற்சியில் இறங்குகிறார். அவரிடமிருந்து தப்பிக்க சென்னைக்கு ஓடிவரும் மாரி, அங்குள்ள ஒரு தீம் பார்க்கில் வேலை செய்யும் முத்துக்காளியிடம் (சூரி) உதவி கேட்கிறார்.
முத்துக்காளி யார், தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் மாரியை ஏன் மீண்டும் தனது சொந்தக் கிராமத்துக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறார், முத்துக்காளியின் கடந்த கால வரலாறு என்ன ஆகியவற்றை ‘மண்டாடி’ திரைப்படம் விவரிக்கிறது.
தமிழ் சினிமாவில் பல ஸ்போர்ட்ஸ் ஜானர் படங்கள் வந்திருந்தாலும், இதுவரை திரையில் அதிகம் காட்டப்படாத ஒரு புதிய விளையாட்டு உலகுக்குள் நம்மை அழைத்துச் செல்லும் முயற்சியிலேயே ‘மண்டாடி’ பாதி வெற்றி பெறுகிறது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு படகுப் போட்டி தொடர்பான காட்சிகளை மிக நேர்த்தியாகவும், விறுவிறுப்பாகவும் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி.
ஒரு விளையாட்டில் தோற்றவன் அனைத்து தடைகளையும் தாண்டி இறுதியில் வெற்றி பெறுவான் என்ற வழக்கமான ஸ்போர்ட்ஸ் படங்களின் பாணியே இதிலும் பின்பற்றப்பட்டுள்ளது என்றாலும், ராமநாதபுரத்தின் கிராமப்புற பின்னணி, கடல், படகுகள், மீனவர்கள் மற்றும் அவர்களின் அன்றாட வாழ்க்கையை பதிவு செய்வதில் இயக்குநர் மதிமாறன் புகழேந்தி காட்டியுள்ள நம்பகத்தன்மை காளியின் கதையை உணர்வுப்பூர்வமாக நம்முடன் இணைய வைக்கிறது.
படகுப் போட்டியின் விதிகள், வியூகங்கள் ஆகியவை மக்களுக்குப் புரியும் வகையில் மிகத் தெளிவாக விளக்கப்பட்டுள்ளன. இதனால் பார்வையாளர்கள் மிக விரைவாக விளையாட்டோடு ஒன்றிப்போகிறார்கள்.
கதையின் நகர்வும், நட்பு – துரோகம் சார்ந்த காட்சிகளும் ஓரளவு கணிக்கக்கூடியதாக இருந்தாலும், அவை படத்தின் ஒட்டுமொத்த தாக்கத்தை பெரியளவில் பாதிக்கவில்லை. சூரி மற்றும் சுஹாஸின் கதாபாத்திரங்கள் ஒன்றுக்கொன்று நேர் எதிராக வடிவமைக்கப்பட்டு கடைசி வரை ஒரே நேர்கோட்டில் பயணிக்கின்றன.
அதேவேளையில், ஆண்கள் ஆதிக்கம் செலுத்தும் கதைக்களத்தில், திரையில் தோன்றும் நேரம் குறைவாக இருந்தாலும், கதையை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் செல்வதில் பெண் கதாபாத்திரங்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
பஞ்சாயத்துத் தலைவராக வரும் பெண், காளியின் தாய், அவரது முன்னாள் காதலி மற்றும் மாரியின் காதலி என அனைவரும் கதையின் முடிவுகளைத் தாங்களே எடுக்கிறார்கள். காளியின் முன்னாள் காதலியைப் பற்றிய உண்மை மாரிக்கு தெரிய வரும் காட்சி, அந்தப் பெண் தனக்கான சுயமரியாதையை நிலைநிறுத்திக் கொள்ளும் வகையில் எழுதப்பட்டுள்ள விதம் பாராட்டுக்குரியது.
கதையின் நாயகனாகச் சூரி தனது பலம் மற்றும் பலவீனங்களைத் துல்லியமாகப் புரிந்து கொண்டு இப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் மூலம் ஒரு மாஸ் நடிகராக தன்னை வலுவாக நிலைநிறுத்திக் கொண்டுள்ளார் என்றுதான் சொல்லவேண்டும். ஆக்ஷன் காட்சிகள் அதற்கு சிறப்பாக கைகொடுத்துள்ளன. முத்துக்காளி கதாபாத்திரத்துக்கு தேவையான உடல் உழைப்பை செவ்வனே வழங்கியுள்ளார்.
தெலுங்கு நடிகரான சுஹாஸ், வில்லத்தனத்தை நடிப்பில் கொண்டு வந்து சாட்டாப்புலி கதாபாத்திரத்துக்கு உயிர் கொடுத்துள்ளார். அவரது டப்பிங்தான் சற்று இடிக்கிறது.
ஏஞ்சல் ராக்கம்மாவாக வரும் மஹிமா நம்பியாருக்கு வலுவான கதாபாத்திரம். தனது நடிப்பால் மனதைக் கவர்கிறார். சத்யராஜ், மாரியாக வரும் ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ மிதுன் ஜெய் சங்கர், ரவீந்திர விஜய் உள்ளிட்டோரும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட கதாபாத்திரங்களில் நிறைவான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.
எஸ்.ஆர்.கதிரின் ஒளிப்பதிவு படத்தின் மிகப் பெரிய பலம். கடலில் நடக்கும் படகுப் போட்டிகளையும், அதன் விறுவிறுப்பையும் அட்டகாச காட்சி அனுபவமாக மாற்றியுள்ளார்.
குறிப்பாக, இடைவேளைக்கு முந்தைய சண்டைக் காட்சியும், சுஹாசுக்கும் சூரிக்கும் இடையே நங்கூரத்தைப் பயன்படுத்தி நடக்கும் சண்டைக் காட்சியும் மிக அற்புதம்.
அதீத ஹீரோயிசம் துருத்திக் கொண்டு தெரிந்தாலும், ஆக்ஷன் காட்சிகள் ஈர்க்க தவறவில்லை. ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசையில் குறிப்பிட்டு சொல்லும்படி எதுவும் இல்லையென்றாலும், படத்தின் ஓட்டத்துக்கு ஈடு கொடுக்கிறது. பீட்டர் ஹெயின், திலீப் சுப்பராயன், மகேஷ் மேத்யூவின் உழைப்பு ஆக்ஷன் காட்சிகளில் தெரிகிறது. கிராபிக்ஸ் காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம்.
‘மண்டாடி’ புதுமைகள் எதுவும் இல்லாத வழக்கமான கமர்ஷியல் கதைக்களத்தை கொண்டிருந்தாலும் அதன் விறுவிறுப்பான திரைக்கதையாலும், நடிகர்களின் நல்ல நடிப்பாலும் பார்வையாளர்களுக்கு ஈர்க்கக்கூடிய திரையனுபவத்தை தருகிறது.















