ஜெயா தொலைக்காட்சியில், 15 ஆண்டுகளுக்கு முன் வெளியான குஷ்பு நடத்திய ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சியின் அடுத்த சீசன், நாளை (செப்.13) முதல் தொடங்குகிறது. இந்நிகழ்ச்சியையும் குஷ்பு நடத்துகிறார்.
புதிய அரங்கம், புத்தம் புதிய சுற்றுகள், எதிர்பாராத சவால்கள் என புதுமையும், விறுவிறுப்புமாக அமைக்கப்பட்டுள்ள இந்நிகழ்ச்சி, இந்த முறையும் 3 அணிகளுக்கு இடையிலான போட்டியாக உருவாக்கப்பட்டுள்ளது. கணவன்-மனைவி, நண்பர்கள் என என்ன உறவாக இருந்தாலும் ஓர் அணியாக இணைந்து போட்டியில் பங்கேற்கலாம். ஒவ்வொரு சுற்றிலும் போட்டியாளர்களின் சவால் அதிகரிக்கும் வகையில் புதுமையான கேள்விகள், வேகத்தைச் சோதிக்கும் போட்டிகள் என பல்வேறு அம்சங்கள் இடம்பெறுகின்றன.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும் வகையில் இந்தப் புதிய ஜாக்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இறுதியில் ரூ.10 லட்சம் வரை வெல்லும் வாய்ப்புடன் பல்வேறு சிறப்புப் பரிசுகளும் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட இருக்கின்றன.
அதுமட்டுமின்றி வீட்டிலிருந்து நிகழ்ச்சியைப் பார்க்கும் பார்வையாளர்களும், வாட்ஸ் ஆப் மூலம் கேட்கப்படும் கேள்விக்குப் பதிலளித்து பரிசுகளை வெல்லலாம். இறுதிச் சுற்றில் இடம்பெறவுள்ள ஏ.ஐ தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திய பிரத்தியேக சவால், இந்தப் புதிய ஜாக்பாட்டின் சுவாரஸ்யங்களில் ஒன்றாக இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ‘ஜாக்பாட்’ நிகழ்ச்சி, நாளை முதல் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இரவு 8 மணிக்கு ஜெயா டிவியில் ஒளிபரப்பாகிறது.














