இரட்டை இலை சின்னம் யாருக்குச் சொந்தம் என்ற உட்கட்சி பஞ்சாயத்து மீண்டும் தேர்தல் ஆணையத்தின் தீர்ப்புக்குப் போயிருக்கிறது. இதனால், அதிமுக கூட்டணிக்காக பாஜக தலைமை பகீரத பிரயத்தனம் செய்துவரும் நிலையில் சின்னத்தை வைத்து சித்து விளையாட்டுக் காட்டிவிடுவார்களோ என்ற அச்சம் அதிமுக-வினர் மத்தியில் அலையடிக்கிறது.
ராணுவ கட்டுப்பாட்டுடன் இருந்த அதிமுக-வுக்குள் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அதிகாரப் போட்டியால் ஏகப்பட்ட குழப்பங்கள். அதனால், மக்கள் மன்றத்தில் அந்தக் கட்சி தொடர் தோல்விகளைச் சந்தித்து வருகிறது. கட்சியை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர நினைத்த பழனிசாமி, 2022 ஜூலையில் பொதுக்குழுவை கூட்டி அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். அதேவேகத்தில் தனது எதிரியான ஓபிஎஸ் உள்ளிட்ட 4 முக்கிய தலைகளை கட்சியைவிட்டு நீக்கினார்.
இதனிடையே, 2023-ல் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்ற சர்ச்சை எழுந்தது. அப்போது தேர்தல் ஆணையம் அந்தத் தேர்தலுக்கு மட்டும் பழனிசாமி தரப்பினர் இரட்டை இலையை பயன்படுத்த அனுமதித்தது. இந்த உத்தரவு, நிலுவை வழக்குகளின் இறுதி தீர்ப்புக்கு உட்பட்டது எனவும் அப்போது ஆணையம் தெளிவுபடுத்தியது.
இந்த நிலையில், திண்டுக்கல்லைச் சேர்ந்த சூரியமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘அதிமுக உள்கட்சி விவகாரம் தொடர்பாக தாக்கல் செய்துள்ள உரிமையியல் வழக்குகள் முடிவுக்கு வரும் வரை அதிமுக-வுக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கக் கூடாது என தேர்தல் ஆணையத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் மனு அளித்தேன். இதுவரையிலும் எந்த பதிலும் இல்லை. எனவே, இது தொடர்பாக உரிய உத்தரவு பிறப்பிக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கில், “சூரியமூர்த்தியின் மனு குறித்து தேர்தல் ஆணையம் 4 வாரங்களில் முடிவெடுக்க வேண்டும். இது தொடர்பாக ஓபிஎஸ் உள்ளிட்ட அனைத்து தரப்பினரின் கருத்துகளையும் கேட்க வேண்டும்” என உத்தரவிட்டது நீதிமன்றம். இதன்படி 23-ம் தேதி பழனிசாமி தரப்பில் முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தேர்தல் ஆணையத்தில் ஆஜராகி, தங்கள் தரப்பு ஆட்சேபங்கள் அடங்கிய மனுவை அளித்தார். ஓபிஎஸ் தரப்பிலும் ஆட்சேப மனு அளிக்கப்பட்டது. ஓபிஎஸ், இபிஎஸ் ஆகியோர் தரப்பில் அளித்த மனுக்களை வழங்கினால், தனது தரப்பு ஆட்சேபங்களை தெரிவிக்க இயலும் என சூரியமூர்த்தி தரப்பிலும் அவகாசம் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக தெரிகிறது.
இது தொடர்பாக பேசிய சி.வி.சண்முகம், “வாதி, பிரதிவாதிகள் தங்கள் தரப்பு ஆட்சேபனைகளை டிசம்பர் 30-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும். அதன் மீது ஏதாவது ஆட்சேபனைகள் இருந்தால் ஜனவரி 13-ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை. 2021 தேர்தலில் அதிமுக வேட்பாளரை எதிர்த்து எம்ஜிஆர் மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டவர். இப்படிப்பட்டவர் அதிமுக குறித்து கேள்வி கேட்க எந்தத் தகுதியும் இல்லை” என்றார்.
ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர் ராஜலட்சுமியோ “அதிமுக அடிப்படை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஓபிஎஸ். அவர் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து கட்சியை வழிநடத்தினார். 2017 பொதுக்குழுவில் இயற்றப்பட்ட தீர்மானங்கள் சட்ட விதிகளுக்கு உட்பட்டு நிறைவேற்றப்படவில்லை. அதனால் இரட்டை இலை சின்னத்தை ஓபிஎஸ்சுக்கு ஒதுக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருக்கிறோம்” என்றார்.
இதுகுறித்து பேசிய முன்னாள் அமைச்சர் செம்மலை, “இரட்டை இலை சின்னம் பழனிசாமிக்கு தான் என நீதிமன்றங்கள் தீர விசாரித்து தீர்ப்பளித்துள்ளன. அதை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்துள்ளது. இந்திய தேர்தல் ஆணையமும் அத்தீர்ப்புகளை ஏற்றுக்கொண்டு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கியுள்ளது. ஒரு இடைக்கால நிலுவை மனுவுக்கு ஒரு வாய்ப்பு அளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதற்காக தேர்தல் ஆணையம் கருத்துகளை கேட்டு வருகிறது. ஆனால், இரட்டை இலை அதிமுக-வுக்கு உறுதி செய்யப்பட்டுவிட்டது” என்றார். அதிமுக-வின் பிரம்மாஸ்திரமான இரட்டை இலை யாருக்குச் சொந்தம் என்ற மர்மம் ஜனவரி 13-ம் தேதி விலகும் என எதிர்பார்க்கலாம்!