‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்விக்கு தயாரிப்பாளர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் தயாரான படங்களில் அதிக வசூல் செய்து சாதனை புரிந்த படம் ‘புஷ்பா 2’. சுமார் ரூ.1,800 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. ஆனால், அப்படத்தின் கதை இன்னும் முடியவில்லை. இதனால் ‘புஷ்பா 3’ எப்போது தொடங்கும் என்ற கேள்வி எழுந்து வந்தது. தற்போது மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் ரவி இதற்கு பதிலளித்துள்ளார்.
‘புஷ்பா 3’ தொடர்பான கேள்விக்கு, “அல்லு அர்ஜுன் அடுத்ததாக அட்லி மற்றும் த்ரிவிக்ரம் ஆகியோரது படங்களில் நடிக்கவுள்ளார். இந்த இரண்டு படங்களையும் முடிக்க இரண்டு ஆண்டுகளாகும். சுகுமாரும் அடுத்ததாக ராம்சரண் நடிக்கும் படத்தினை இயக்கவுள்ளார். இருவருமே தங்களுடைய படங்களை முடிக்கவே 2028-ம் ஆண்டு ஆகும். ஆகையால் 2028-ம் ஆண்டு ‘புஷ்பா 3’ தொடங்கும்” என்று தயாரிப்பாளர் ரவி தெரிவித்துள்ளார்.
இந்த வீடியோ பதிவு இணையத்தில் பெரும் வைரலாகி வருகிறது. சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவான படங்கள் ‘புஷ்பா’ மற்றும் ‘புஷ்பா 2’. இரண்டுமே மாபெரும் வரவேற்பைப் பெற்றதால், 3-ம் பாகத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.