திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்று ஐந்தாண்டுகள் ஆகும் நிலையில், வாரக் கடைசியில் மட்டுமே கட்சி நடவடிக்கைகளுக்காக திருப்பூருக்கு வந்து செல்வதைச் சுட்டிக்காட்டி, ‘வீக் எண்ட்’ மாவட்டச் செயலாளர் என அதிமுக-வுக்குள் இருக்கும் சிலரே அவரை சத்தமில்லாமல் கலாய்க்கிறார்கள்.
திருப்பூர் அதிமுக-வுக்குள் இருக்கும் கோஷ்டி பூசலை சமாளிக்க பொள்ளாச்சியிலிருந்து ஜெயராமனை திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இறக்குமதி செய்தது அதிமுக தலைமை. இந்த நிலையில், குடும்பத்தை பொள்ளாச்சியில் வைத்துவிட்டு அரசியல் நடவடிக்கைகளுக்காக அவ்வப்போது திருப்பூருக்கு வந்து செல்வதை வழக்கமாக்கிக் கொண்டார் ஜெயராமன். முக்கிய நிகழ்வுகள் ஏதும் இல்லாத போது பெரும்பாலும் அவர் வாரக் கடைசியிலேயே திருப்பூருக்கு வந்து செல்வதால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என தமாஷ் பண்ணுகிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய திருப்பூர் அதிமுக சீனியர்கள் சிலர், “இப்போது அதிமுக-வில் எல்லோருக்கும் எஸ்.பி.வேலுமணியைத் தான் பிரதானமாக தெரிகிறது. ஆனால், வேலுமணி அதிமுக-வுக்குள் வரும் போதே கோவை மாவட்ட அதிமுக செயலாளராக இருந்தவர் பொள்ளாச்சி ஜெயராமன். திருப்பூர் மாவட்ட அதிமுக-வை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்எல்ஏ-வான கே.என்.விஜயகுமார், முன்னாள் எம்எல்ஏ-வான சு.குணசேகரன், முன்னாள் எம்பி-யான சிவசாமி என நான்கு பேரும் நான்கு திசையில் பாராமுக அரசியல் செய்து வருகிறார்கள். இதனாலேயே உள்ளூர்க்காரர்களை தவிர்த்துவிட்டு வெளியூர்காரரான பொள்ளாச்சி ஜெயராமனை மாநகர் மாவட்டத்துக்கு செயலாளராக்கியது தலைமை.
ஜெயராமனைப் பொறுத்தவரை தனது சொந்த மாவட்டமான கோவையில் தான் அரசியல் செய்ய நினைத்தார். ஆனால், கோவை மாவட்டத்தின் 10 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் தான் மட்டுமே ராஜாவாக இருக்க வேண்டும் என நினைக்கும் வேலுமணி, சமயம் பார்த்து சீனியரான ஜெயராமனை திருப்பூர் பக்கம் திருப்பிவிட்டு விட்டார். ஆனாலும் கோவை மாவட்டத்தின் மீது ஜெயராமனுக்கு இன்னமும் ஒரு கண் இருக்கிறது. அதனால் தான் குடும்பத்தை அங்கேயே வைத்துவிட்டு இங்கு வந்து பார்ட்டைம் அரசியல் செய்துவிட்டுச் செல்கிறார். திருப்பூருக்கு வந்துவிட்டதால், பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதிகளை தனியாக பிரித்து அதற்கு மாவட்டச் செயலாளராக வரவேண்டும் என நினைத்த பொள்ளாச்சி ஜெயராமனின் ஆசையும் இதன் மூலம் நிராசையாகிவிட்டது” என்றனர்.
இன்னும் சிலரோ, “திருப்பூர் மாவட்ட அதிமுக-வில் பொறுப்புகளில் இருப்பவர்கள் கட்சி வளர்ச்சிக்காக பெரிதாக ஏதும் அலட்டிக் கொள்ளாத நிலையில், பொள்ளாச்சி ஜெயராமன் வெளியூரில் இருந்து இங்கு வந்து போனாலும் கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதாகவே நினைக்கிறோம். அவரைப் பிடிக்காதவர்கள் வேண்டுமானால் அவரை ‘வீக் எண்ட்’ மா.செ என கிண்டல் பண்ணலாம். ஆனால், கோஷ்டி சண்டையை ஒழிக்க இப்போதைக்கு ஜெயராமன் மா.செ பதவியில் இருப்பதே ஆறுதல்” என்கிறார்கள்.
இது தொடர்பாக திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமனிடம் கேட்டதற்கு, “ஒன்றுபட்ட கோவை மாவட்டச் செயலாளராக நான் இருந்த போது திருப்பூரும் கோவை மாவட்டத்துக்குள் தான் இருந்தது. திருப்பூர் நகராட்சியாக இருந்த போது நான் திருப்பூர் மாவட்டச் செயலாளராக இருந்திருக்கிறேன். நெகமம் கந்தசாமிக்கு பிறகு திருப்பூர் மாவட்டச் செயலாளராக அதிகமான ஆண்டுகள் இருந்தவன் நான். 2020-க்கு முன்பு திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளராக இருந்தேன். அதன் பிறகு திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக பணியாற்றி வருகிறேன். ஆக, நான் ஒன்றும் திருப்பூருக்கு அந்நியன் இல்லை.
பொள்ளாச்சியில் இருந்து இங்கு வந்து செல்வதில் எனக்கொன்றும் பெரிய சிரமம் இல்லை. பொள்ளாச்சி, கிணத்துக்கடவு, வால்பாறை தொகுதிகளை தனியாக பிரித்து அதற்கு மாவட்டச் செயலாளராக வேண்டும் என நான் கேட்கவில்லை. சிலர் அனுமானத்தில் அப்படிச் சொல்வார்கள். கட்சியில் சீனியர் என்ன… ஜூனியர் என்ன? நாம் ஒருகாலத்தில் இருந்தோம். இன்றைக்கு எஸ்.பி.வேலுமணி இருக்கிறார். அவர் அனைவருடனும் சுமுக உறவில் உள்ளார். நான் திருப்பூர் மாநகர் மாவட்டச் செயலாளராக இருப்பதில் யாருக்கும் எந்த வருத்தமும் இல்லை. திருப்பூர் மாநகராட்சி கவுன்சிலர்கள் 50 பேரில் 20 பேர் இப்போது அதிமுக-வினர். திருப்பூர் மாநகரை பொறுத்தவரைக்கும் எனக்கு கட்சியினர் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறார்கள்” என்றார்.
விட்டுக் கொடுத்த இடத்தை மீண்டும் எட்டிப் பிடிப்பது அத்தனை சுலபமில்லை என்பது அம்மிக் கல்லையும் உடைக்கும் அரண்மனை கோழி மூட்டையாம் அரசியலுக்கு மட்டும் விதிவிலக்கா என்ன?