இனிகோ பிரபாகர் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘மின்னும் ஓர் இரவு’ படத்தில் அஞ்சு கிருஷ்ணா அஷோக், சுப்பிரமணியம் சிவா, சத்யா, அருவி பாலா, உதயா, யாசர், ராஜன் உள்பட பலர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். மருத்துவர் பி.ராபர்ட் ராஜ், தனது எஸ்.பி.ராபர்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் தயாரித்துள்ள இப்படத்தை சிவபிரபு செல்வராஜ் இயக்கியுள்ளார்.
சுரேஷ்குமார் சுந்தரம் ஒளிப்பதிவு செய்ய, பிரணவ் சூரஜ் இசையமைத்துள்ளார். நவ. 27-ல் வெளியாகும் இதன் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. படக்குழுவினருடன் இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் சிவபிரபு செல்வராஜ் கூறும்போது, “இப்படத்தின் கதை முழுவதும் இரவில் நடைபெறுகிறது. இதனால் படப்பிடிப்புத் தளங்களைத் தேர்வு செய்வதில் கடுமையான சவால்கள் இருந்தன. நாங்கள் தேர்வு செய்த கிராமத்தில் மொத்தம் 34 குடும்பங்கள்தான் இருந்தன. அதிலும் அந்தக் குடும்பங்களின் வயதானவர்கள் மட்டுமே அங்கு வசிக்கிறார்கள். அவர்களுக்குத் தொந்தரவு தராமல் படப்பிடிப்பை நடத்த வேண்டிய சூழல் இருந்தது. அதை உணர்ந்து படப்பிடிப்பை நடத்தினோம். படத்தை பார்த்தவர்கள் சிறப்பாக இருப்பதாகச் சொன்னார்கள். கண்டிப்பாக எல்லோருக்கும் பிடிக்கும்” என்றார்.












