எனக்குள் ஒரு பற்றற்ற உணர்வு வளர்ந்தது. என் மனம் புற உலகிலிருந்து முற்றிலும் விலகியது. இத்தகைய பெரிய பொறுப்புகளுக்கு மத்தியில் தியானம் சவாலானதாக மாறுகிறது, ஆனால் கன்னியாகுமரி மண் மற்றும் சுவாமி விவேகானந்தரின் உத்வேகம் அதை சிரமமற்றதாக ஆக்கியது. கன்னியாகுமரியில் இதே இடத்தில் சுவாமி விவேகானந்தர் தியானம் செய்தபோது என்ன அனுபவித்திருப்பார் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
இந்தப் பற்றற்ற நிலைக்கு மத்தியில், அமைதிமற்றும் மவுனத்தின் மத்தியில், என் மனம் பாரதத்தின் பிரகாசமான எதிர்காலத்தைப் பற்றியும், பாரதத்தின் குறிக்கோள்களைப் பற்றியும் தொடர்ந்து சிந்தித்துக் கொண்டிருந்தது. கன்னியாகுமரியில் உதிக்கும் சூரியன் என்எண்ணங்களுக்கு புதிய உயரங்களைக் கொடுத்தது, கடலின் பரந்த தன்மை என் எண்ணங்களை விரிவுபடுத்தியது, அடிவானத்தின் விரிவு தொடர்ந்து பிரபஞ்சத்தின் ஆழத்தில் பொதிந்துள்ள ஒற்றுமையை எனக்கு உணர்த்தியது. பல தசாப்தங்களுக்கு முன்பு இமயமலையின் மடியில் மேற்கொள்ளப்பட்ட அவதானிப்புகளும் அனுபவங்களும் மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவது போல் தோன்றியது.
கன்னியாகுமரி எப்போதும் என் இதயத்திற்கு மிகவும் நெருக்கமானதாகும். விவேகானந்தர் பாறை நினைவு மண்டபம், ஏக்நாத் ரானடே தலைமையில் கட்டப்பட்டது. ஏக்நாத்துடன் விரிவாக பயணம் செய்யும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இந்த மணி மண்டபம் கட்டப்பட்ட போது, கன்னியாகுமரியிலும் சில காலம் செலவிடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை… இது நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் இதயத்திலும் ஆழமாக வேரூன்றிய ஒரு பொது அடையாளம். அன்னை சக்தி கன்னியாகுமரியாக அவதரித்த ‘சக்தி பீடம்’ இது. இந்தத் தென்கோடியில், அன்னை சக்தி தவம் செய்து, பாரதத்தின் வடக்கு பகுதியில் இமயமலையில் உறையும் பகவான் சிவபெருமானுக்காகக் காத்திருந்தார்.
கன்னியாகுமரி சங்கமிக்கும் பூமி. நமதுதேசத்தின் புனித நதிகள் பல்வேறு கடல்களில்கலக்கின்றன, இங்கோ கடல்கள் சங்கமமாகின்றன. பாரதத்தின் சித்தாந்த சங்கமம் என்ற மற்றொரு மாபெரும் சங்கமத்தை இங்கே நாம்காண்கிறோம்! இங்கு விவேகானந்தர் நினைவுமண்டபம், திருவள்ளுவர் சிலை, காந்தி மண்டபம், காமராஜர் மணி மண்டபம் ஆகியவை உள்ளன. இந்த ஜாம்பவான்களின் சிந்தனை நீரோட்டங்கள் இங்கு சங்கமித்து, தேசிய சிந்தனையின் சங்கமத்தை உருவாக்குகின்றன. இது தேச நிர்மாணத்திற்கு பெரும் உத்வேகத்தை அளிக்கிறது. கன்னியாகுமரியில் உள்ள திருவள்ளுவரின் பிரம்மாண்டமான சிலை கடலில் இருந்து அன்னை பாரதியின் அகன்று விரிந்துள்ள நிலத்தைப் பார்ப்பது போல் உள்ளது. இவரது திருக்குறள் தமிழ்மொழியின் மணி மகுடங்களில் ஒன்று.
‘ஒவ்வொரு தேசத்துக்கும், வழங்குவதற்கு ஒரு செய்தியும், நிறைவேற்றுவதற்கு ஒரு பணியும், அடைவதற்கு ஒரு இலக்கும் உள்ளன’என்று சுவாமி விவேகானந்தர் ஒருமுறை கூறினார்.
ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, பாரதம் இந்த அர்த்தமுள்ள நோக்கத்துடன் முன்னேறி வந்துள்ளது. நாம் ஈட்டிய செல்வத்தை நமது தனிப்பட்ட செல்வமாக நாம் ஒருபோதும் கருதுவதில்லை. இது என்னுடையது அல்லஎன்பதே பாரதத்தின் உள்ளார்ந்த மற்றும் இயல்பான தன்மையின் பகுதியாக மாறிவிட்டது.
பாரதத்தின் நலன், வளர்ச்சியை நோக்கிய இந்த கிரகத்தின் பயணத்திற்கும் பலன் அளிப்பதாக இருக்கும். தற்போது, பாரதத்தின் ஆட்சி முறை, உலகிலுள்ள பல நாடுகளுக்கும் சிறந்த முன்னுதாரணமாக மாறியுள்ளது. 25 கோடி மக்களுக்கு அதிகாரமளித்து, அவர்கள் 10 ஆண்டுகளில் வறுமையின் பிடியிலிருந்து மீண்டது இதுவரை கண்டிராதது. மக்களுக்கு உகந்த நல்லாட்சி, முன்னேற்றத்தை விரும்பும் மாவட்டங்கள் மற்றும் முன்னேற்றத்தை விரும்பும் வட்டாரங்கள் (ஊராட்சி ஒன்றியங்கள்) போன்ற புதுமையான நடைமுறைகள், தற்போதுஉலகளவில் விவாதிக்கப்பட்டு வருகிறது. ஏழைகளுக்கு அதிகாரமளித்தல் முதல் கடைக் கோடியில் உள்ள மக்களுக்கும் அரசுத் திட்டங்களின் பலன் சென்றடையச் செய்வதற்கான நமது முயற்சிகளும், சமுதாயத்தின் கடைக் கோடியில் இருக்கும் தனி நபர்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் உலக நாடுகளுக்கு உத்வேகமளித்துள்ளது.
21-ம் நூற்றாண்டின் உலகம், பல்வேறு நம்பிக்கையுடன் பாரதத்தை எதிர்நோக்கி உள்ளது. எனவே, உலக அரங்கில் முன்னேறிச்செல்ல, நாமும் பல்வேறு மாற்றங்களை மேற்கொள்வது அவசியம். நமது சீர்திருத்தங்களும்,2047-க்குள் ‘லட்சிய பாரதத்தின்’ (வளர்ச்சியடைந்த பாரதம்) எதிர்பார்ப்புகளுக்கேற்ப அமைய வேண்டும். எனவேதான், சீர்திருத்தம், செயல்படுத்தல் மற்றும் நாட்டிற்காக மாற்றியமைத்தல் என்ற தொலைநோக்குப் பார்வையைநான் வகுத்துள்ளேன். சீர்திருத்தத்தின் பொறுப்பு, அரசின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களைச் சார்ந்தது. அதன் அடிப்படையில், நமது அதிகார வர்க்கம் செயல்படுவதோடு, மக்கள் பங்கேற்பு என்ற உணர்வோடு மக்களும் இணையும்போது, மாற்றம் நிகழ்வதை நம்மால் காண முடியும்.
நம் நாட்டை, ‘வளர்ச்சியடைந்த பாரதம்’ ஆக மாற்றுவதற்கான அடிப்படைக் கொள்கைகளை நாம் மிகச் சிறந்ததாக மாற்ற வேண்டும். நான்கு திசைகளிலும் நாம் விரைந்து பணியாற்றுவது அவசியம்: வேகம், அளவு, வாய்ப்பு மற்றும் தரம். உற்பத்தியோடு சேர்த்து, தரம் மற்றும் ‘குறைபாடு இல்லை-விளைவுகள் இல்லை’ என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றுவதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
ஒரு நாடாக, காலங்கடந்த சிந்தனைகள் மற்றும் நம்பிக்கைகளை நாம் மறுபரிசீலனை செய்வதும் அவசியம். அவநம்பிக்கையை தொழிலாகவே கொண்டவர்களின் பிடியிலிருந்து சமூகத்தை நாம் விடுவிப்பதும் அவசியம்.எதிர்மறையிலிருந்து விடுபடுவது என்பது, வெற்றிக்கான முதற்படி என்பதையும் நாம் நினைவில்கொள்ள வேண்டும். நேர்மறை எண்ணம் இருந்தால்தான் வெற்றி மலரும்.
கடந்த 10 ஆண்டுகளில், பாரதத்தின் திறமை மென்மேலும் வளர்ச்சியடைந்து வருவதை நான் கண்கூடாக பார்த்து வருவதுடன், அதனை கைமேல் உணர்ந்தும் இருக்கிறேன். அடுத்த 25 ஆண்டுகளில், ‘வளர்ச்சியடைந்த பாரதத்திற்கு’ நாம் அடித்தளமிட்டிருக்கிறோம். அடுத்த 50 ஆண்டுகளை இந்த தேசத்திற்காக மட்டும் நாம் அர்ப்பணிக்க வேண்டும் என்று, 1897-ல் சுவாமி விவேகானந்தர் கூறினார். இத்தகைய அழைப்பு விடுக்கப்பட்ட 50 ஆண்டுகளில், 1947-ம் ஆண்டு பாரதம் சுதந்திரத்தைப் பெற்றது.
தற்போதும், அத்தகையதொரு பொன்னான வாய்ப்பை நாம் பெற்றிருக்கிறோம். நாமும், அடுத்த 25 ஆண்டுகளை, தேசத்திற்காக மட்டும் அர்ப்பணிக்க வேண்டும். நமது முயற்சிகள், வருங்கால சந்ததியினருக்கு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்துவதுடன், வரவிருக்கும் நூற்றாண்டுகள், பாரதத்தை புதிய உச்சத்திற்கு அழைத்துச் செல்லும். நாட்டின் ஆற்றல் மற்றும் உற்சாகத்தைப் பார்க்கும்போது, நாம் விரைந்து முயற்சிப்பதுடன்… நாம்அனைவரும் ஒன்றிணைந்தால், லட்சியபாரதத்தை (வளர்ச்சியடைந்த பாரதத்தை) உருவாக்குவதற்கான இலக்கு வெகுதொலைவில் இல்லை என்று என்னால் கூறமுடியும்.