நாடாளுமன்றத்தில் 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. முதல் இரு நாட்கள் புதிய எம்பிக்கள் பதவியேற்கின்றனர்.
இந்த சூழலில் திரிணமூல் காங்கிரஸ் எம்பி மஹுவா மொய்த்ரா நேற்று சமூக வலைதளத்தில் புகைப்பட பதிவு ஒன்றை வெளியிட்டார். அதில், கடந்த 2019-ம் ஆண்டில் எம்பிக்களாக பதவி வகித்த கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலேவின் புகைப்படத்தையும், தற்போதைய மக்களவையில் அவர்கள் மீண்டும் ஒன்றுகூடிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். புதிய புகைப்படத்தில் சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவின் மனைவி டிம்பிள் யாதவ் கூடுதலாக இடம்பெற்றுள்ளார்.
மக்களவையில் நேற்று ஒன்றுகூடிய இண்டியா கூட்டணியின் பெண் எம்பிக்கள் டிம்பிள் யாதவ், கனிமொழி, தமிழச்சி தங்க பாண்டியன், ஜோதிமணி, மஹுவா மொய்த்ரா, சுப்ரியா சுலே. புகைப்படத்துடன் மஹூவா மொய்த்ரா வெளியிட்டுள்ள குறிப்பில், “மக்களவையில் மீண்டும் களமிறங்கிய போர் வீரர்கள்! 2024 vs 2019” என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்பட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
மேற்குவங்கத்தின் கிருஷ்ணா நகர் மக்களவைத் தொகுதியில் இருந்து மஹுவா மொய்த்ரா எம்பியாக தேர்வு செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டின் தூத்துக்குடி தொகுதியில் இருந்து கனிமொழி, மகாராஷ்டிராவின் பாராமதி தொகுதியில் இருந்து சுப்ரியா சுலே, தமிழ்நாட்டின் கரூர் தொகுதியில் இருந்து ஜோதிமணி, தமிழ்நாட்டின் மத்திய சென்னை தொகுதியில் இருந்து தமிழச்சி தங்கபாண்டியன், உத்தரபிரதேசத்தின் மெயின்புரி தொகுதியில் இருந்து டிம்பிள் யாதவ் ஆகியோர் எம்பிக்களாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர். இவர்கள் அனைவரும் எதிர்க்கட்சி களின் இண்டியா கூட்டணியை சேர்ந்தவர்கள் ஆவர்.
கடந்த மக்களவையில் 78 பெண் எம்பிக்கள் இருந்தனர். இந்த எண்ணிக்கை குறைந்து தற்போதைய மக்களவையில் 74 பெண் எம்பிக்கள் மட்டுமே உள்ளனர். மிக அதிகபட்சமாக மேற்குவங்கத்தில் இருந்து 11 பெண் எம்பிக்கள் மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.