யுவா கபடியில் வேல்ஸ் அணி சாம்பியன்

0
58

யுவா கபடி தொடரின் தமிழக கிளப் சாம்பியன்ஷிப் போட்டிகள் சென்னையை அடுத்த பொன்னேரியில் நடைபெற்று வந்தது. மாநிலம் முழுவதிலும் இருந்து 16 அணிகள் இந்த தொடரில் நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் வேல்ஸ் பல்கலைக்கழகம் – கற்பகம் பல்கலைக்கழகம் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் தொடக்க முதல் ஆதிக்கம் செலுத்திய வேல்ஸ் பல்கலைக்கழகம் 49-19 என்ற புள்ளிகள் கணக்கில் அபார வெற்றி பெற்றது. வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிரெய்டின் வாயிலாக 23 புள்ளிகளையும், டேக்கிள் வாயிலாக 16 புள்ளிகளையும், ஆல் அவுட் செய்ததின் மூலம் 8 புள்ளிகளையும், எக்ஸ்ட்ராவாக 2 புள்ளிகளையும் பெற்றது.

ரெய்டில் அந்த அணி தரப்பில் சதீஷ் கண்ணன் 12 புள்ளிகளை குவித்தார். இவர் புரோ கபடியில் தமிழ்தலைவாஸ் அணிக்காக விளையாடி உள்ளார். அதேவேளையில் டேக்கிள் வாயிலாக சக்தி வேல் 8 புள்ளிகள் சேர்த்தார். இவரும் புரோ கபடி லீக்கில்பெங்கால் வாரியர்ஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.

இவர்களுடன் ரெய்டில் திருக்குமரன் 6 புள்ளிகளையும், பாபு முருகேசன், அஜித்குமார் ஆகியோர் ரெய்டு, டேக்கிள் வாயிலாக தலா 4 புள்ளிகளை சேர்த்து அணிக்கு பலம் சேர்த்தனர்.சாம்பியன் பட்டம் வென்ற வேல்ஸ் பல்கலைக்கழகம் அணிக்கு ரூ.20லட்சம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது. 2-வது இடம் பிடித்த கற்பகம் பல்கலைக்கழக அணி ரூ.10 லட்சம் பரிசாக பெற்றது.

சிறந்த ரெய்டர்.. யுவா கபடி தொடரின் சிறந்த ரெய்டராக கே.ஆர்.ஸ்போர்ட்ஸ் அணியின் வீரர் கங்காநாத் கிருஷ்ணன் தேர்வானார். அவர், ரெய்டின் வாயிலாக 161 புள்ளிகளை குவித்திருந்தார். சிறந்த டிபன்டராக கற்பகம் பல்கலைக்கழக அணியின் சக்திவேல் தங்கவேலு தேர்வானார். அவர், டேக்கிள் வாயிலாக 58 புள்ளிகளை பெற்றிருந்தார். இவர்கள் இருவருக்கும் தலா ரூ.50 ஆயிரம் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.