சூப்பர் ஓவரில் பாகிஸ்தானை வென்றது அமெரிக்கா: T20 WC

0
101

நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரின் ‘குரூப் – ஏ’ பிரிவு ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் பாகிஸ்தானை சூப்பர் ஓவரில் வென்றது அமெரிக்கா. இந்தப் போட்டியில் இரண்டு அணிகளும் 159 ரன்கள் எடுத்தன. ஆட்டம் சமனில் முடிந்ததால் வெற்றியாளரை தீர்மானிக்க சூப்பர் ஓவர் நடத்தப்பட்டது.

அமெரிக்காவில் டாலஸில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற அமெரிக்கா பந்து வீச முடிவு செய்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது.

அந்த அணி 26 ரன்கள் எடுப்பதற்குள் ரிஸ்வான், உஸ்மான் கான், ஃபஹர் ஸ்மான் போன்ற பேட்ஸ்மேன்களை இழந்திருந்தது. கேப்டன் பாபர் அஸம் மற்றும் ஷதப் கான் இணைந்து 72 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தனர். ஷதப், 25 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். பாபர், 43 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து வெளியேறினார். இப்திகார் அகமது 18 மாற்று ஷாஹீன் ஷா அப்ரிடி 23 ரன்கள் எடுத்தனர். 2-வது ஓவரில் ஸ்டீவன் டெய்லர் அற்புத கேட்ச் எடுத்து ரிஸ்வானை வெளியேற்றினார்.

160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை அமெரிக்கா விரட்டியது. கேப்டன் மோனங்க் படேல் மற்றும் ஸ்டீவன் டெய்லர் இன்னிங்ஸை ஓபன் செய்தனர். ஷாஹீன் ஷா அப்ரிடி, முகமது அமீர், நசீம் ஷா ஆகியோரது வேகத்தை இருவரும் சமாளித்தனர். இருந்தும் 12 ரன்களில் டெய்லர், நசீம் ஷா பந்து வீச்சில் விக்கெட்டை இழந்தார். அப்போது 36 ரன்களை எடுத்திருந்தது அமெரிக்கா.

தொடர்ந்து ஆண்ட்ரீஸ் கவுஸ் களத்துக்கு வந்தார். அவருடன் இணைந்து 68 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார் மோனங்க். 35 ரன்களில் கவுஸ் ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஆரோன் ஜோன்ஸ் 36 ரன்கள் எடுத்தார். அவர்கள் இருவரும் 26 பந்துகளை எதிர்கொண்டு இருந்தனர். மோனங்க், 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நிதிஷ் 14 ரன்கள் எடுத்தார்.

கடைசி ஓவரில் அமெரிக்காவின் வெற்றிக்கு 15 ரன்கள் தேவைப்பட்டது. ஹாரிஸ் ரவூஃப் அந்த ஓவரை வீசினார். அதில் 14 ரன்கள் மட்டுமே அமெரிக்கா எடுக்க ஆட்டம் சமனில் முடிந்தது. 20 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது அமெரிக்கா.

சூப்பர் ஓவர்: சூப்பர் ஓவரில் முதலில் ஆடிய அமெரிக்கா 18 ரன்கள் எடுத்தது. ஆமீர் அந்த ஓவரை பாகிஸ்தான் சார்பில் வீசினார். அவர் வீசிய எக்ஸ்ட்ராக்கள் பாகிஸ்தானுக்கு பாதகமாக அமைந்தது.

6 பந்துகளில் 19 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில் பாகிஸ்தான் பேட் செய்தது. அதில் 1 விக்கெட்டை இழந்து 13 ரன்கள் மட்டும் எடுத்தது பாகிஸ்தான். சவுரப் நேத்ரால்வகர் அந்த ஓவரை அமெரிக்க அணிகக்க வீசினார். நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் இது இரண்டாவது சூப்பர் ஓவராகும்.

இந்த வெற்றியின் மூலம் இந்தியா, அயர்லாந்து, கனடா, பாகிஸ்தான் அணிகள் அங்கம் வகிக்கும் குரூப் – ஏ பிரிவில் அமெரிக்கா, நான்கு புள்ளிகளுடன் முதலிடம் வகிக்கிறது. இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. ஆட்ட நாயகன் விருதை மோனங்க் படேல் வென்றார்.