’ஜெய் பீம்’ படம் மூலம் தமிழ் சினிமா பார்வையாளர்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய இயக்குநர் த.செ.ஞானவேலும், ‘ஜெயிலர்’ பெற்ற வெற்றியை தக்கவைக்கும் முனைப்பில் இருந்த ரஜினியும் கைகோத்துள்ள படம்தான் ‘வேட்டையன்’. டீசர், ட்ரெய்லர் வெளியானபோதே என்கவுன்டரை நியாயப்படுத்தும் காட்சிகளுக்காக விமர்சிக்கப்பட்டது. அந்த விமர்சனங்களுக்கான விடை படத்தில் இருந்ததா என்பதை இந்த விமர்சனத்தில் பார்க்கலாம்.
தமிழகத்தின் பிரபலமான என்கவுன்டர் ஸ்பெஷலிஸ்ட் எஸ்.பி அதியன் (ரஜினிகாந்த்). ‘தாமதமான நீதி… மறுக்கப்பட்ட நீதி’ என்ற கொள்கையுடன் மோசமான ரவுடிகளை என்கவுன்டர் செய்து வருபவர். இன்னொரு பக்கம் என்கவுன்டருக்கு எதிரான மனநிலை கொண்டு, அதைக் கடுமையாக எதிர்க்கும் ஓய்வுபெற்ற நீதிபதி சத்யதேவ் (அமிதாப் பச்சன்). போதைப் பொருள் பிரச்சினை குறித்து ரஜினிக்கு கடிதம் எழுதும் அரசுப் பள்ளி ஆசிரியை மர்ம நபர் ஒருவரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு உயிரிழக்கிறார். இந்தக் கொலையை செய்தது யார் என்று கண்டுபிடித்து, அவரை என்கவுன்டர் செய்ய முடிவு செய்யும் ரஜினி, தனது நோக்கத்தில் வெற்றி பெற்றாரா என்பதுதான் ‘வேட்டையன்’ சொல்லும் கதை.
’ஜெய்பீம்’ மூலம் கஸ்டடி மரணத்தை பற்றிய உண்மைக் கதையை தழுவி அதை உணர்வுபூர்வமாகவும், ஜனரஞ்சமாகவும் சொல்லி வெற்றி பெற்ற ஞானவேல் தற்போது போலி என்கவுன்டர் பிரச்சினையை அதுவும் தமிழகத்தில் என்கவுன்டர்கள் அதிகரித்திருக்கும் ஒரு சூழலில் சரியான நேரத்தில் கையில் எடுத்திருக்கிறார். ரஜினி என்ற ஒரு பிரம்மாண்ட பிராண்டின் மூலம் முடிந்தவரையில் தான் சொல்லவந்த கருத்தை சிறப்பாக சொல்ல முயற்சித்திருக்கிறார்.
படம் தொடங்கிய முதல் 20 நிமிடங்கள் ரசிகர்களுக்கான மாஸ் திருவிழா. ரஜினியின் இன்ட்ரோ தொடங்கி, அடுத்து ‘மனசிலாயோ’ பாடல் வரை ரஜினி ரசிகர்களுக்கு விருந்து. குறிப்பாக வில்லனின் சுருட்டு பறந்து கீழே விழும்போது அதன் துளை வழியே ரஜினியை காட்டும் ஷாட்டில் தியேட்டர் தெறிக்கிறது. தேவையற்ற ‘வளவள’ காட்சிகள் எதுவுமில்லாத கதாபாத்திர அறிமுகம் முடிந்து படம் ஞானவேல் பாணிக்கு மாறிவிடுகிறது. துஷாராவின் பின்னணி, தொடர்ந்து அவரது மரணம், அதன் பிறகான விசாரணை என படம் அடுத்தடுத்த காட்சிகளுக்கு நகர்ந்துகொண்டே செல்கிறது. என்கவுன்டருக்கு பின்னால் நடக்கும் விஷயங்களை போகிற போக்கில் பேசாமல் ஆழமாக பேசிய விதம் அருமை. முதல் பாதி முழுவதுமே ஒரு சில யூகிக்க கூடிய காட்சிகளை தவிர பெரிதாக குறைசொல்ல எதுவும் இல்லை.
படத்தின் பிரச்சினை இரண்டாம் பாதியில் தொடங்குகிறது. ஒன்று, முழுமையான ரஜினி படமாக இருந்திருக்க வேண்டும் அல்லது ’ஜெய்பீம்’ பாணியிலான படமாக சென்றிருக்க வேண்டும். ஆனால் இரண்டாம் பாதி இந்த இரண்டுக்கும் பல இடங்களில் நடுவே சிக்கிக் கொண்டு தவிக்கிறது. சீரியசான இன்வெஸ்டிகேட் த்ரில்லர் முயற்சியில் இடையிடையே சொருக்கப்பட்ட ரஜினிக்காகவே வைக்கப்பட்ட சில மசாலா காட்சிகள் சுத்தமாக எடுபடவில்லை. ரஜினி ரசிகர்களுக்காகவே வைக்கப்பட்ட அந்தக் காட்சியில் அவர்களே அமைதியாகத்தான் உட்கார்ந்திருந்தனர். உள்ளடக்கத்தை அடிப்படையாகக் கொண்டு நகரவேண்டிய கதையில் இப்படியான பரிசோதனை முயற்சியை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். அவை இரண்டாம் பாதியை தொய்வடையச் செய்கின்றன.
ரஜினி வழக்கமாக ஸ்டைலாக நடந்து வருவது, கண்ணாடியை தூக்கிப் போட்டு மாட்டுவது ஆகியவற்றை தாண்டி இந்தப் படத்தில் தனது நடிப்பு பரிமாணத்தையும் காட்டியிருக்கிறார். செய்த தவறுக்காக குற்ற உணர்ச்சியில் உழலும் காட்சிகளில் நடிப்பில் ஸ்கோர் செய்கிறார். ரஜினிக்கு அடுத்தபடியாக படம் முழுக்க தனது வசீகர நடிப்பால கவர்வது பேட்ரிக் என்ற கதாபாத்திரத்தில் வரும் ஃபஹத் ஃபாசில். படம் முழுக்க அவர் அடிக்கும் கவுன்டர்கள் ரசிக்க வைக்கின்றன. இதற்கு முன்னால் வெளியான ‘ஆவேஷம்’ படம் பெரிய ஹிட் அடித்தாலும் இதுபோன்ற ஒரு கேரக்டர்களிலும் தயங்காமல் நடிக்கும் ஃபஹத் போற்றுதலுக்குரியவர். ஓய்வுபெற்ற நீதிபதியாக வரும் அமிதாப் பச்சன் தனது தேர்ந்த நடிப்பால் ஈர்க்கிறார். துஷாரா விஜயன், ரித்திகா சிங் இருவருக்குமே வலுவாக கதாபாத்திரம். இருவருமே அதை நிறைவாக செய்துள்ளனர்.
படத்தில் வீணடிக்கப்பட்டது மஞ்சு வாரியர்தான். படத்தில் அவருக்கு பெரிதாக வேலையே இல்லை. க்ளைமாக்ஸுக்கு முன்பாக அவருக்கு வைக்கப்பட்ட ஒரு ‘மாஸ்’ காட்சி மட்டுமே ஓகே ரகம். அதேபோல ராணாவுக்கான காட்சிகளும் வலுவாக எழுதப்படவில்லை. படம் தொய்வடையும் பல இடங்களில் காப்பாற்றுவது வழக்கம் போல அனிருத். ஏற்கெனவே வைரல் ஹிட்டான ‘மனசிலாயோ’, ‘ஹன்டர்’ பாடல்கள் படத்தில் சரியாகவே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்க்கிறது.