செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி குழுவினர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். பின்னர், பல்வேறு குறைபாடுகளை அரசு உடனடியாக சரி செய்ய அக்குழு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏழை எளிய மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அரசின் அவசர சிகிச்சை மையம் அமைக்க வேண்டும். கூட்டுறவு, மகளிர் சுய உதவிக் குழுக்களின் சார்பில் மலிவு விலை உணவகங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.
வார இறுதி நாட்கள் மற்றும் முகூர்த்தநாட்களில் கூடுதல் பேருந்துகளை இயக்கநடவடிக்கை எடுக்க வேண்டும். செங்கல்பட்டில் ரயில்வே சந்திப்பு உள்ளதால்செங்கல்பட்டு பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் வரை பேருந்துகளை இயக்க வேண்டும். செங்கல்பட்டிலிருந்து இரவு நேரப் பேருந்து சேவையும் வேண்டும்.
மீனம்பாக்கத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை உடனடியாக மெட்ரோ ரயில் திட்டத்தைத் தொடங்கி இப்பணிகளை விரைந்து செயல்படுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தை மகேந்திரா சிட்டி வரை நீட்டிப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.
செங்கல்பட்டிலிருந்து கடற்கரைக்கு கூடுதல் ரயில் சேவை இயக்க வேண்டும். மாநகர போக்குவரத்துக் கழக பேருந்துகளுக்கான செயலி சென்னை பேருந்து செயலியில் உள்ளது போன்று தமிழ்நாடு அனைத்து பேருந்துக்கான ஆண்ட்ராய்ட் செயலியை உருவாக்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்.