ஸ்ரீபெரும்புதூர் பாலப் பணி விரைவில் தொடங்கும்: சட்டப் பேரவையில் அமைச்சர் எ.வ.வேலு தகவல்

0
212

சட்டப் பேரவையில், கேள்வி நேரத்தின்போது, சட்டப் பேரவை காங்கிரஸ் கட்சித் தலைவர் கு.செல்வப்பெருந்தகை, “முதல்வர் வெளிநாடுகளுக்குப் பயணித்து அந்நிய முதலீடுகளைப் பெற்று வருகிறார். இந்த முதலீடுகள் குறிப்பாக ஸ்ரீபெரும்புதூர் தொகுதியை நோக்கி வருகின்றன.

தமிழகத்தில் 36 சதவீதம் தொழிற்சாலைகள் உள்ள பகுதி இது. ஆனால், போக்குவரத்து நெரிசல் நாளுக்கு நாள் அதிகமாகியுள்ளது. இதற்கான புதிய திட்டங்கள் உள்ளதா? ஸ்ரீபெரும்புதூர் பாலம் நீண்ட நாட்களாக கட்டப்படாமல் உள்ளது. பணிகளை முடிக்க நடவடிக்கை எடுக்கப்படுமா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு, “புதிய திட்டம் உருவாக்கப்பட்டு, 5 கட்டமாகப் பிரித்து, ஒப்பந்தம் கோரப்பட்டு, புறவழிச்சாலைஅமைத்துள்ளோம்.

திருவள்ளூரில் தொடங்கி ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோயில்- மாமல்லபுரத்தில் உள்ள பூஞ்சேரியை இணைக்கும் வகையில் இத்திட்டம் அமைகிறது. அந்த திட்டத்தில், ஸ்ரீபெரும்புதூர்- சிங்கபெருமாள் கோயில் இடையில்தான் அதிகளவில் தொழிற்சாலைகள் உள்ளன.

எங்கெல்லாம் நான்கு வழி சந்திப்பு உள்ளதோ, அங்கெல்லாம் பாலம் கட்டவேண்டும் என்ற அடிப்படையில்தான் பணிகள் நடந்து வருகின்றன. போக்குவரத்து நெரிசலைக் குறைக்க பாலம் அமைக்க ஆய்வு நடைபெற்று வருகிறது. ஸ்ரீபெரும்புதூர் பாலப் பணிகள் 2 மாதங்களில் தொடங்கப்பட உள்ளன. இந்த அரசு, சாலைகள் போடுவதற்கு முன்னுரிமை அளித்து வருகிறது” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here