சோலார் பேனல் பொருத்தினால் 300 யூனிட் வரை இலவச மின்சாரம்: ரூ.75,000 கோடியில் ‘சூரிய வீடு’ திட்டம்

0
207

சூரிய மின்சக்தியை ஊக்குவிக்கும் வகையில் ‘பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம்’ ரூ.75,000 கோடிக்கும் மேற்பட்ட முதலீட்டில் தொடங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். இதன்மூலம் வீட்டின் கூரையில் சோலார் பேனல்களை பொருத்திக் கொள்ளும் வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

நாட்டில் சூரிய மின்சக்தி பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சியாக, வீடுகளின் மேற்கூரையில் சோலார் பேனல்கள் (சூரிய மின்சக்தி தகடுகள்) பொருத்துவதற்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. அரசு மானியங்கள் கிடைப்பதன் மூலம், அதிகமான குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் இப்போது மேற்கூரையில் சோலார் பேனல்களை பொருத்தி வருகின்றன.

இந்நிலையில், இத்திட்டத்தை ஊக்குவிப்பதற்காக ‘பிரதமரின் சூரியவீடு: இலவச மின்சாரம்’ என்ற திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று கூறியிருப்பதாவது:

நிலையான வளர்ச்சி மற்றும் மக்கள் நலனை ஊக்குவிப்பதற்காக, பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டம் தொடங்கப்படுகிறது. ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் வழங்கும் வகையில் ரூ.75,000 கோடிக்கு மேற்பட்ட முதலீட்டில் இத்திட்டம் தொடங்கப்படுகிறது.

இத்திட்டத்துக்கு அதிக சலுகையுடன் வங்கி கடன் கிடைக்கும். நிலையான மானியம் மக்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தும் திட்டத்துக்காக மக்களுக்கு செலவு ஏற்படாது என்பதை அரசு உறுதி செய்யும். இத்திட்டத்தில் தொடர்புடைய அனைவரும் தேசிய ஆன்லைன் இணையதளத்தில் ஒருங்கிணைக்கப்படுவார்கள்.

வீட்டின் கூரையில் சூரிய மின்சக்தி தகடு பொருத்தும் இத்திட்டத்தை அடிமட்ட அளவில் பிரபலப்படுத்தும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், பஞ்சாயத்துகள் ஊக்குவிக்கப்படும். இந்த திட்டம் அதிக வருவாயை ஈட்டித் தரும், மின்சார செலவை குறைக்கும், மக்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும். சூரிய மின்சக்தியையும், நிலையான வளர்ச்சியையும் நாம் ஊக்குவிப்போம்.

இத்திட்டத்தில் சேர வீட்டு உரிமையாளர்கள் https://pmsuryaghar.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

மானிய விவரம்: குடியிருப்பு வீடுகளுக்கு 1 கிலோவாட் முதல் 2 கிலோவாட் வரை திறன் உள்ள சோலார் பேனல்கள் பொருத்த ரூ.30,000 மானியம் வழங்கப்படும். கூடுதல் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு, கிலோ வாட் ஒன்றுக்கு ரூ.18,000 வீதம், 3 கிலோவாட் வரை மொத்தம் ரூ.78,000 மானியம் வழங்கப்படும். 3 கிலோ வாட் திறனுக்கு அதிகமான அளவில் சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்துவோருக்கு உச்சவரம்பாக ரூ.78,000 மானியம் வழங்கப்படும்.

மாத மின் நுகர்வு சராசரியாக 150யூனிட் வரை இருந்தால், 1 முதல் 2 கிலோவாட் திறனுள்ள சூரிய சோலார் பேனல்கள் பொருத்தி ரூ.30,000 முதல் ரூ.60,000 வரை மானிய உதவி பெறலாம். மின் நுகர்வு மாதத்துக்கு சராசரியாக 150 யூனிட் முதல் 300 யூனிட் வரைஇருந்தால் 2 கிலோவாட் முதல் 3 கிலோவாட் திறனுள்ள சூரிய மின்சக்தி தகடுகள் பொருத்தி ரூ.60,000 முதல் ரூ.78,000 வரை மானியம் பெறலாம். மாத சராசரி மின் நுகர்வு 300 யூனிட்டுக்குமேல் உள்ளவர்கள் 3 கிலோவாட் திறனுக்கு அதிக அளவிலான சோலார் பேனல்களை பொருத்தினாலும் மானிய உச்ச வரம்பு ரூ.78,000 தான்.

பிரதமரின் சூரிய வீடு: இலவச மின்சார திட்டத்தின்கீழ் மானியம் பெற்று தங்கள் வீடுகளின் மேற்கூரையில் சூரிய மின்சக்தி தகடுகளை பொருத்த விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தை தேர்வு செய்து, மின் நுகர்வு எண்,செல்போன் எண், இ-மெயில் முகவரியை பதிவு செய்ய வேண்டும். ஒப்புதல் கிடைத்ததும் வீடுகளில் சூரியமின்சக்தி தகடு பொருத்த நடவடிக்கை எடுக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here