மகாராஷ்டிர மாநிலம் ஷேகானில் உள்ள மவுலி பள்ளியில் தேசிய சப்-ஜூனியர் அட்யா பட்யா சாம்பியன்ஷிப் நடைபெற்றது. இதில் தமிழக ஆடவர் அணி லீக் சுற்றில் கேரளா, டெல்லி, ஜார்க்கண்ட், சத்தீஸ்கர் ஆகிய அணிகளை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது. ஆனால் கால் இறுதி சுற்றில் தமிழக அணி, புதுச்சேரியிடம் தோல்வி அடைந்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது.
அதேவேளையில் மகளிர் பிரிவில் தமிழக அணி வெண்கலப் பதக்கம் கைப்பற்றியது. லீக் சுற்றில் தமிழக மகளிர் அணி கோவா, அருணாச்சல் பிரதேசம், ஆந்திரா, ஒடிசா அணிகளை வீழ்த்தியது. தொடர்ந்து கால் இறுதியில் கர்நாடகாவை தோற்கடித்தது. இதன் பின்னர் நடைபெற்ற அரை இறுதி சுற்றில் தமிழக மகளிர் அணி புதுச்சேரியிடம் தோல்வி கண்டது. இதனால் வெண்கலப் பதக்கத்துடன் தமிழக மகளிர் அணி தொடரை நிறைவு செய்தது.