உ.பி முசாபர்நகர் கலவரம்: பாஜக, இந்து அமைப்பினர் 25 பேர் மீதான வழக்கை திரும்பப் பெற நீதிமன்றம் அனுமதி

0
38

உத்தரப் பிரதேசத்தின் முசாபர்நகரில் கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கலவரம் தொடர்பாக பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான அரசின் கோரிக்கையை எம்பி – எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

முசாபர்நகர் மாவட்டம் நக்லா மடோர் பகுதியில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 31 அன்று நடந்த மகாபஞ்சாயத்து கூட்டத்தில் பேசியதன் மூலம், தடையுத்தரவை மீறியது, பொது ஊழியர்கள் தங்கள் கடமைகளைச் செய்வதற்கு இடையூறு விளைவித்தது, மத ரீதியிலான பதற்றத்தைத் தூண்டியது ஆகிய பிரிவுகளின் கீழ் பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீது வழக்குகள் பதியப்பட்டன.

பாஜக தலைவர்களான சுரேஷ் ரானா, முன்னாள் எம்எல்ஏ சங்கீத் சோம், முன்னாள் எம்பி பாரதேந்திர சிங் ஆகியோர் ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் கூறப்பட்டதை அடுத்து, 2013 செப்டம்பரில் முசாபர்நகரில் மத மோதல்கள் வெடித்தன.

இதைத் தொடர்ந்து ஏற்பட்ட கலவரங்களில் குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான இஸ்லாமிய குடும்பங்கள் இடம்பெயர்ந்தன. முசாபர்நகர் மற்றும் ஷாம்லி மாவட்டங்களில் பாலியல் வன்கொடுமை மற்றும் துன்புறுத்தல் சம்பவங்கள் நடந்ததாகவும் புகார்கள் எழுந்தன.

இது தொடர்பாக மாநில அமைச்சர் கபில் தேவ் அகர்வால், முன்னாள் மத்திய அமைச்சர் சஞ்சீவ் பால்யான், முன்னாள் மாநில அமைச்சர் சுரேஷ் ரானா, முன்னாள் மாநில அமைச்சர் அசோக் கட்டாரியா, முன்னாள் எம்பிக்கள் பாரதேந்திர சிங், சோகன்வீர் சிங், முன்னாள் எம்எல்ஏக்கள் அசோக் கன்சால், உமேஷ் மாலிக், விஹெச்பி தலைவர் சாத்வி பிராச்சி, தாஸ்னா சிவக் கோயிலைச் சேர்ந்த நர்சிங்கானந்த் உள்ளிட்டோர் மீது வழக்குகள் பதியப்பட்டன.

இந்த வழக்குகள் எம்பி, எம்எல்ஏக்களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், இந்த வழக்குகளில் இருந்து பாஜக மற்றும் இந்து அமைப்புகளைச் சேர்ந்த 25 பேர் மீதான வழக்குகளை திரும்பப் பெற மாநில அரசு முடிவு செய்து, அதற்கான மனுவை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தது. இந்த மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதாக செய்தி வெளியாகி உள்ளது.

முன்னதாக கடந்த 2013 பிப்ரவரி மாதத்தில் முசாபர்நகரில் நடந்த கலவரத்தின்போது 8 பேர் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை எனக் கூறி 37 பேரை உத்தரப் பிரதேச நீதிமன்றம் விடுதலை செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Google search engine

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here