Home உலக செய்திகள் “ஒரு முழுமையான உடன்பாடு எட்டப்படும் வரை…!” – போர் நிறுத்தத்துக்கு ஊடே ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

“ஒரு முழுமையான உடன்பாடு எட்டப்படும் வரை…!” – போர் நிறுத்தத்துக்கு ஊடே ட்ரம்ப் விடுத்த எச்சரிக்கை

0

“ஒரு முழுமையான, இறுதியான உடன்பாடு எட்டப்படும் வரை அமெரிக்காவின் போர்க் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள் உள்ளிட்ட அனைத்தும் ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்,” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள ட்ரூத் சோஷியல் சமூக ஊடக பதிவில், “ஏற்கெனவே பெருமளவில் பலவீனமடைந்துள்ள எதிரியை கொன்று குவிப்பதற்கும் அழிப்பதற்கும் அவசியமான அமெரிக்காவின் அனைத்து போர் கப்பல்கள், போர் விமானங்கள், ராணுவ வீரர்கள், கூடுதல் வெடிமருந்துகள், ஆயுதங்கள் உள்ளிட்ட அனைத்தும் உண்மையான உடன்பாடு முழுமையாக நிறைவேற்றப்படும் வரை ஈரானிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் நிலை கொண்டிருக்கும்.

ஏதேனும் ஒரு காரணத்துக்காக ஒப்பந்தம் நிறைவேற்றப்படாவிட்டால் – அதற்கான வாய்ப்பு சாத்தியமற்றது என்றாலும் – தாக்குதல் இதுவரை யாரும் கண்டிராத அளவுக்குப் பெரியதாகவும், சிறந்ததாகவும், வலிமையானதாகவும் இருக்கும்.

அணு ஆயுதங்களை தயாரிக்க மாட்டோம் என ஏற்கனவே ஒப்புக்கொள்ளப்பட்டபடி ஈரான் நடந்து கொள்ளும். அதேபோல், ஹார்முஸ் ஜலசந்தி திறந்தும், பாதுகாப்பானதாகவும் இருக்கும். இதற்கு இடையில், நமது மாபெரும் ராணுவம் ஆயுதங்களை தயார் நிலையில் வைத்தபடி ஓய்வெடுத்து வருகிறது. உண்மையில் அது தனது அடுத்த வெற்றியை எதிர்நோக்கி காத்திருக்கிறது. அமெரிக்கா மீண்டும் வந்துவிட்டது” என்று தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா – ஈரான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள போதிலும், லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. லெபனானில் உள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினரை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் தொடர் தாக்குதல்களை நடத்தி வருகிறது. அமெரிக்கா – ஈரான் இடையேயான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் ஹிஸ்புல்லா சேர்க்கப்படவில்லை என்றும், எனவே அந்த அமைப்புக்கு எதிரான ராணுவ நடவடிக்கை தொடரும் என்றும் இஸ்ரேல் அதிபர் பெஞ்சமின் நெதன்யாகு கூறியுள்ளார். லெபனான் மீது இஸ்ரேல் நேற்று (புதன்கிழமை) நடத்திய தாக்குதலில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனால் அதிருப்தி அடைந்துள்ள ஈரான், ஹார்முஸ் ஜலசந்தியை நேற்றிரவு முடக்கிவிட்டதாக செய்திகள் கூறுகின்றன. அதேநேரத்தில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கப்பட்டுள்ளதா இல்லையா என்பது குறித்து தெளிவாக தெரியவில்லை என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version