துருக்கியில் நேட்டோ உச்சி மாநாட்டை முடித்துக் கொண்டு அமெரிக்கா திரும்பிய அதிபர் ட்ரம்ப் ஏர்போர்ஸ் ஒன் விமானத்தில் அளித்த பேட்டியில் கூறியதாவது: இந்தியா – பாகிஸ்தான் இடையே கடந்தாண்டு ஏற்பட்ட மோதலில் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன.
இது அணு ஆயுத போராக மாறும் நிலை ஏற்பட்டது. போரை நான்தான் தடுத்து நிறுத்தினேன். இந்த மோதலை நிறுத்தியதன் மூலம் 3 கோடி முதல் 5 கோடி மக்களின் உயிரைக் காப்பாற்றிய பெருமை ட்ரம்ப்பையே சேரும் என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் பாராட்டினார்.
உண்மையில், இந்தியா – பாகிஸ்தான் போர் உட்பட 8 போர்களை நான் தடுத்து நிறுத்தினேன். இதற்காக அமைதிக்கான நோபல் பரிசு எனக்கே கிடைத்திருக்க வேண்டும். இவ்வாறு ட்ரம்ப் கூறினார். தனது தலையீட்டால் இந்தியா – பாகிஸ்தான் மோதல் முடிவுக்கு வந்ததாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், இரு நாட்டு ராணுவங்களுக்கு இடையே நடந்த நேரடிப் பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக இந்திய அரசு கூறியது. மேலும் இந்த மோதலில் எப்-16 உட்பட பாகிஸ்தான் விமானப்படையின் ஒரு டஜன் விமானங்கள் அழிக்கப்பட்டதாக இந்தியா கூறியது. ஆனால் எந்த நாட்டு போர் விமானங்கள் என குறிப்பிடாமல் 11 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டதாக அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
