Home உலக செய்திகள் ஈரான் உடனான போர் நிறுத்தம் ‘நிறைவு’ – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

ஈரான் உடனான போர் நிறுத்தம் ‘நிறைவு’ – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு

0

“ஈரானுடனான தற்காலிக போர் நிறுத்த ஒப்பந்தம் நிறைவு பெறுகிறது. அவர்கள் பொய்யர்கள். அவர்களுடன் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள விரும்பவில்லை” என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார்.

துருக்கியின் அங்காராவில் நடைபெற்ற நேட்டோ அமைப்பின் வருடாந்திர உச்சி மாநாட்டின் இடையே நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ருட்டேவுடன் இணைந்து டொனால்டு டரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவர், “ஈரானுடனான தற்காலிகப் போர் நிறுத்த ஒப்பந்தம் என்னை பொறுத்தவரை நிறைவுற்றது. ஈரான் தலைவர்கள் தனிப்பட்ட முறையில் சில நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்கிறார்கள். பின்னர் பொதுவெளியில் அவற்றை மறுக்கிறார்கள். இனி, நேர்மையான முறையில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த முடியும் என நான் நம்பவில்லை. அவர்கள் பொய்யர்கள்.

ஈரானுடனான பேச்சுவார்த்தையை அமெரிக்க தரப்பு தொடர்ந்து நடத்தலாம். ஆனால், அது நேரத்தை வீணடிக்கும் செயல் என்றே நான் நினைக்கிறேன். அவர்கள் பொய்யர்கள், ஏமாற்றுக்காரர்கள், மனநிலை சரியில்லாதவர்கள்.” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் ஹார்முஸ் ஜலசந்தியில் பயணித்த 3 வணிகக் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல்களை நடத்தியது. இதற்கு பதிலடியாக ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார் தளங்கள், புரட்சிகர காவலர் கப்பல்கள் உள்பட 80-க்கும் மேற்பட்ட ஈரானிய இலக்குகளை அமெரிக்கப் படைகள் தாக்கின.

மேலும், ஈரான் எண்ணெய் விற்பனையை செய்வதற்கான அனுமதியையும் அமெரிக்கா ரத்து செய்தது. அமெரிக்கப் படைகளின் தாக்குதலுக்கு பதிலடியாக பஹ்ரைன் மற்றும் குவைத்தில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களைக் குறிவைத்து ஈரான் தாக்குதல்களை நடத்தியது.

மீண்டும் தொடங்கி இருக்கும் இந்த மோதல், மேலும் விரிவடைந்து கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர வழிவகுக்குமோ என்ற அச்சத்தை அதிகரித்துள்ளது.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version