சவுதி அரேபியாவின் மெக்கா நகரில் உள்ள பள்ளிவாசலில் முத்தமிட்டு ஒழுக்கக்கேடான செயலில் ஈடுபட்டதாக 2 வங்கதேச தொழிலாளர்கள் தூக்கிலிடப்பட்ட விவகாரம் உலக அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
சவுதி அரேபியாவின் மெக்கா பள்ளிவாசலுக்குள் ஒழுக்கக்கேடான செயல்களில் ஈடுபட்டதாகக் கூறி நஸ்ருல் இஸ்லாம் அப்துல் பசீர், சிட்டி அக்தர் ஆகிய இரு வங்கதேச நாட்டினருக்கு கடந்த 14ம் தேதி மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அங்குள்ள ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.
நஸ்ருலின் தந்தை கூறுகையில், “எனது மகனுக்கு சரியான நீதி விசாரணை வழங்கப்படவில்லை. நியாயமின்றி என் மகன் கொல்லப்பட்டிருந்தால் எனக்கு நீதி வேண்டும்” எனக் கண்ணீருடன் தெரிவித்துள்ளார். இருவரும் தம்பதிகள் என்றும், பள்ளிவாசலுக்குள் கணவன் மனைவி நெற்றியில் முத்தமிட்டதற்காகவே இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாகவும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர்.
ஆனால், நைஜீரியாவைச் சேர்ந்த பிரபல பதிவர் எம்.சி. அல்ஹாஜி, “நானும் எனது மனைவியும் மெக்கா பள்ளிவாசல் அருகில் பலமுறை அன்பைப் வெளிப்படுத்தியிருக்கிறோம். நெற்றியில் முத்தமிட்டதற்காக மரண தண்டனை வழங்கப்பட்டது என்பது முற்றிலும் இணையத்தில் பரப்பப்படும் வதந்தி. சவுதி அரசு அவர்கள் செய்த உண்மையான குற்றம் என்ன என்பதை வெளிப்படையாக அறிவிக்காததே குழப்பங்களுக்கு் காரணம்” என்று பதிவிட்டுள்ளார்.
வங்கதேச வெளியுறவு் இணையமைச்சர் ஷாமா ஒபாயித் இஸ்லாம் கூறுகையில்,“மரண தண்டனை குறித்து எந்த தகவலும் சவுதி வழங்கவில்லை. ஊடகங்கள் மூலமாகவே அறிந்து கொண்டோம்” என்றார்.
இதுகுறித்து சவுதி தூதரை நேரில் வரவழைத்து வங்கதேச வெளியுறவு அமைச்சகம் விளக்கம் கேட்டுள்ளது. சவுதி அரசின் இந்த நடவடிக்கை மனித உரிமை செயற்பாட்டாளர்களாலும், வங்கதேச மக்களாலும் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது.
