Home விளையாட்டு செய்திகள் “அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களுக்கு அநீதி…” – எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் ஆதங்கம் |...

“அர்ஜெண்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில் எங்களுக்கு அநீதி…” – எகிப்து பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் ஆதங்கம் | FIFA WC 2026

0

பிஃபா உலகக் கோப்பை கால்பந்து தொடரில் நேற்று முன்தினம் இரவு அட்லாண்டாவில் நடைபெற்ற ரவுண்ட் ஆஃப் 16 சுற்றில் நடப்பு சாம்பியனான அர்ஜெண்டினா 3-2 என்ற கோல் கணக்கில் எகிப்து அணியை வீழ்த்தி கால் இறுதி சுற்றுக்கு முன்னேறியது.

இந்த ஆட்டத்தில் கடைசி 13 நிமிடங்கள் வரை எகிப்து அணி 2-0 என வலுவாக இருந்தது. ஆனால் அதன் பின்னர் ஆட்டம் தலைகீழாக மாறியது. எகிப்து அடித்த ஒரு கோல், விஏஆர் சோதனையின் மூலம் முந்தைய ஃபவுலைக் காரணம் காட்டி ரத்து செய்யப்பட்டது.

அர்ஜெண்டினா அணி தனது வெற்றிக் கோலை அடிப்பதற்கு சற்று முன்பாக, முகமது சாலா மற்றும் ஹம்டி ஃபதி ஆகியோர் அர்ஜெண்டினா வீரர்களால் ஃபவுல் செய்யப்பட்டபோது எகிப்துக்கு கிடைக்க வேண்டிய பெனால்டி வாய்ப்புகள் விஏஆர் மூலம் சரிபார்க்கப்படாமல் மறுக்கப்பட்டன.

இந்நிலையில் இந்த போட்டியில் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரான்சுவா லெடெக்சியர் தலைமையிலான நடுவர் குழுவின் செயல்பாடுகளுக்கு எதிராக எகிப்து கால்பந்து சங்கம் பிஃபாவிடம் அதிகாரப்பூர்வமாகப் புகார் அளித்துள்ளது. போட்டியின் முக்கிய தருணங்களில் எகிப்துக்கு ஆதரவான விஏஆர் மறுஆய்வுகள் திட்டமிட்டே தவிர்க்கப்பட்டதாகவும் எகிப்து குற்றம் சாட்டியுள்ளது.

இதனால் தொடரின் மீதமுள்ள போட்டிகளில் இருந்து பிரான்சுவா லெடெக்சியர் மற்றும் அவரது நடுவர் குழுவினரை உடனடியாக நீக்க வேண்டும் என்றும், இந்த தவறுகள் குறித்து பிஃபா விரிவான விசாரணை நடத்த வேண்டும் என்றும் எகிப்து கால்பந்து சங்கத் தலைவர் ஹானி அபோ ரிடா வலியுறுத்தியுள்ளார்.

அர்ஜெண்டினா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் எகிப்து அணியின் தலைமைப் பயிற்சியாளர் ஹோசாம் ஹசன் கூறும்போது, “நான் இதை நாசூக்காகப் பேசி, இது துரதிர்ஷ்டம் என்று கடந்து போக விரும்பவில்லை. நாங்கள் அநியாயமாக ஏமாற்றப்பட்டிருக்கிறோம், எங்களுக்கு இழைக்கப்பட்டிருப்பது அநீதி. நாங்கள் அங்கு மரியாதையையோ அல்லது நியாயமான ஆட்டத்தையோ பார்க்கவில்லை. அங்கு மரியாதையும் இல்லை, நியாயமான ஆட்டமும் இருக்கவில்லை.

ஒருவேளை அவர்கள் உலக சாம்பியனை இந்தத் தொடரில் தொடர்ந்து தக்கவைக்க விரும்பியிருக்கலாம். ஒருவேளை மெஸ்ஸி தொடர்ந்து போட்டியில் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் நினைத்திருக்கலாம். கால்பந்தில் சில நேரங்களில் தொழில்நுட்ப ஆட்டத்தையும் தாண்டி சில வெளிப்புறக் காரணிகள் ஆதிக்கம் செலுத்துகின்றன. உலக சாம்பியன்கள் அனைத்து மட்டங்களிலும் ஆதரவைப் பெற்றனர்” என்றார்.

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version