ஈரான் மீது அமெரிக்கா புதிய வான்வழித் தாக்குதல்களை நடத்தியுள்ளது. இதற்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளை இலக்கு வைத்து ஈரான் பதில் தாக்குதல் நடத்தியுள்ளது. இதன் மூலம் வளைகுடாப் போரை முடிவுக்குக் கொண்டு வர எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் பின்னடைவைச் சந்தித்துள்ளன.
ஹார்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது ஈரான் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இதையடுத்து ஈரான் மீது அமெரிக்கா நடத்திய இரண்டு நாள் வான்வழித் தாக்குதல்களில் ஈரானில் 14 பேர் உயிரிழந்துள்ளனர்; 78 பேர் காயமடைந்துள்ளனர். 90 இலக்குகள் மீது தாக்குதல் அமெரிக்க ராணுவத்தின் மத்திய கட்டளைப் பிரிவு, ஈரான் முழுவதும் சுமார் 90 இலக்குகளைத் தாக்கியதாகத் தெரிவித்துள்ளது.
உலகின் ஒட்டுமொத்த எரிசக்தி வர்த்தகத்தில் ஐந்தில் ஒரு பங்கு கடந்து செல்லும் ஹார்முஸ் நீரிணையில், கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் ஈரானின் நடவடிக்கைகளை சீர்குலைப்பதே இந்தத் தாக்குதல்களின் நோக்கம் என்று அமெரிக்கா கூறியுள்ளது.
ஈரானின் அணுமின் நிலைய வளாகம் அமைந்துள்ள புஷெஹ்ர், சாபஹார் உள்ளிட்ட பல முக்கிய துறைமுக நகரங்களில் குண்டுவெடிப்புகள் நிகழ்ந்ததாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. மேலும், முதன் முறையாக ஈரானியப் பாலங்களையும் அமெரிக்கா இலக்கு வைத்துள்ளது. துருக்கியில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்து கொண்டு வந்த பிறகு, ட்ரம்ப் தனது சமூக ஊடகப் பக்கத்தில் ஈரானில் நிகழ்ந்த குண்டுவெடிப்புகள் என்று கூறி சில வீடியோக்களைப் பகிர்ந்துள்ளார். ஈரானுக்கு மற்றொரு எச்சரிக்கையையும் விடுத்துள்ளார்.
“கப்பல்கள் மீது ஈரான் நடத்திய குண்டு வீச்சுக்கு பழிவாங்கும் நடவடிக்கை இது. இச்செயல் மீண்டும் நடந்தால், நிலைமை இன்னும் மோசமாகும்” என்று ட்ரம்ப் எச்சரித்துள்ளார். மேலும், மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் உள்ளிட்ட ஈரானின் பொது உள் கட்டமைப்புகளைத் தாக்குவதற்கும், எண்ணெய் உற்பத்தியின் முக்கிய மையமான கார்க் தீவைக் கைப்பற்றுவதற்கும் தான் விடுத்த பழைய அச்சுறுத்தல்களை டிரம்ப் மீண்டும் கையில் எடுத்துள்ளார்.
போரை நிறுத்துவதற்கான தற்காலிக ஒப்பந்தம் “முடிந்துவிட்டது” என்று ட்ரம்ப் கூறினார். இதற்குப் பதிலளித்த ஈரானின் நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப், “நீங்கள் தாக்கினால், உங்களுக்கும் அடி விழும்” என்று எக்ஸ் தளத்தில் சவாலாகப் பதிவிட்டுள்ளார்.
பிப்ரவரி 28 அன்று கொல்லப்பட்ட கமேனியின் இறுதிச் சடங்குகளுக்குப் பிறகு, நீரிணையை முழுமையாக மீண்டும் திறப்பது மற்றும் அணு சக்தித் திட்டம் உள்ளிட்ட முக்கியமான விஷயங்கள் குறித்து இருதரப்பும் பேச்சுவார்த்தை நடத்தவிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக உயர்ந்ததுடன், ஒட்டுமொத்த மத்திய கிழக்கிலும் மீண்டும் போர் வெடிக்குமோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. சர்வதேச நீர்வழியில் வணிகக் கப்பல்களைத் தாக்கியதற்குப் பதிலடியாக, ஈரானின் வான் பாதுகாப்பு அமைப்புகள், ரேடார்கள் மற்றும் புரட்சிகரக் காவல் படையின் 60-க்கும் மேற்பட்ட சிறிய படகுகளை அமெரிக்க ராணுவம் தாக்கி அழித்துள்ளது.
கப்பல்கள் மீதான ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து, தற்காலிக ஒப்பந்தத்தின் கீழ் ஈரானுக்கு வழங்கப்பட்டிருந்த அமெரிக்க டாலர்களில் பகிரங்கமாக எண்ணெய் விற்பனை செய்யும் உரிமத்தை அமெரிக்கா அதிரடியாக ரத்து செய்துள்ளது. இதன் விளைவாக ஈரான் இனிமேல் உலக சந்தையில் வெளிப்படையாக எண்ணெய் விற்பனையை டாலர்களில் சம்பாதிக்க முடியாது. இதனால் ஈரானுக்குப் பொருளாதார ரீதியாக மிகப்பெரிய நெருக்கடி ஏற்படும் சூழலும் ஏற்பட்டுள்ளது.
