அமெரிக்காவுடன் மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ள நிலையில், ஈரானின் மறைந்த உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது உடலுக்கு பல்லாயிரக்கணக்கான மக்கள் இறுதி அஞ்சலி செலுத்தியது குறிப்பிடத்தக்கது.
ஈரானின் உச்ச தலைவராக இருந்த அயத்துல்லா அலி கமேனி கடந்த பிப்ரவரி 28-ம் தேதி அமெரிக்கா, இஸ்ரேல் நடத்திய கூட்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார். அவருடன் அவரது மூத்த மகள், மருமகன், மருமகள், 14 மாத பேத்தி ஆகியோரும் கொல்லப்பட்டனர். போர் தொடர்ந்ததால் அவர்களின் இறுதிச் சடங்கு நடைபெறவில்லை.
இந்த சூழலில் போர் பதற்றம் தணிந்த காரணத்தால், ஈரான் தலைநகர் டெஹ்ரானில் கமேனி உள்ளிட்ட உயிரிழந்த அவரது குடும்பத்தினருக்கு இறுதிச்சடங்கு நிகழ்வுகள் கடந்த வாரம் தொடங்கின. அவர்களின் உடல் பல்வேறு நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இந்நிலையில், இந்திய நேரப்படி இன்று (ஜூலை 10) ஈரானின் கிழக்கு பகுதியில் உள்ள மஷாத் நகரில் உள்ள இமாம் ரெசா நினைவிடத்தில் முறைப்படி அவரது உடலை ஈரான் நல்லடக்கம் செய்தது. அந்த பகுதியில் திரளான மக்கள் திரண்டு வழிபாடு மேற்கொண்டனர்.
ஈரான் – அமெரிக்கா மீண்டும் மோதல்
ஈரான் – அமெரிக்கா இடையே கடந்த மாதம் 17-ம் தேதி போர் நிறுத்தம் தொடர்பான அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் 14 அம்சங்கள் இடம்பெற்றன. இரு தரப்பு போர் நிறுத்தம், கச்சா எண்ணெய் கப்பல் போக்குவரத்துக்கு ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு, ஈரான் மீதான தடைகள் நீக்கம் உட்பட 14 அம்சங்கள் அமைதி ஒப்பந்தத்தில் இடம்பெற்றன.
இதையடுத்து, ஹார்முஸ் ஜலசந்தி கப்பல் போக்குவரத்துக்கு திறந்து விடப்பட்டது. எனினும், ஈரான் கடலோர பகுதியில் உள்ள வழித்தடத்தில்தான் செல்ல வேண்டும், ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியைக் கடந்து சென்றால் தாக்குதல் நடத்தப்படும் என்று ஈரான் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தது.
இந்நிலையில், மார்ஷல் தீவு எண்ணெய் கப்பல் அல் ரெஹாயத், சவுதி கப்பல் வெட்யான், லைபீரியா கப்பல் சைப்ரஸ் ப்ராஸ்பெரிட்டி ஆகிய 3 எண்ணெய் கப்பல்கள் ஓமன் கடற்கரையை ஒட்டி ஹார்முஸ் ஜலசந்தியை கடந்த சில தினங்களுக்கு முன்பு கடந்தன. அவற்றின் மீது ஈரான் ராணுவத்தினர் திடீரென தாக்குதல் நடத்தினர்.
அதற்கு பதிலடியாக ஈரானின் துறைமுக நகரங்கள் பந்தர் அப்பாஸ், சிரிக், கேஷ்ம்ப் தீவு உட்பட 80 இடங்களில் அமெரிக்கா நேற்று முன்தினம் குண்டு வீசி தாக்குதல் நடத்தியது. இதில் வான் பாதுகாப்புக் கருவிகள், ரேடார் மையங்கள், ஏவுகணை தளங்கள், 60-க்கும் மேற்பட்ட கடற்படை படகுகள் அழிக்கப்பட்டதாக அமெரிக்க ராணுவ கட்டுப்பாட்டு மையம் சென்ட்காம் தெரிவித்தது.
அமெரிக்காவின் தாக்குதலுக்குப் பதிலடியாக பஹ்ரைன், குவைத் மற்றும் இதர வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியது. இதனால் வளைகுடா நாடுகளில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
