ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்ய வந்த பயணி ஒருவரின் உரிமம் பெற்ற கைத்துப்பாக்கி தற்செயலாக வெடித்ததில் பாதுகாப்புப் படை வீரர்கள் இருவர் காயமடைந்தனர்.
உத்தர பிரதேச மாநிலம் வாராணசியில் இருந்து மும்பை செல்லவிருந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணிப்பதற்காக வந்த பயணி ஒருவரிடம் இருந்த கைத்துப்பாக்கியை பரிசோதித்தபோது எதிர்பாராதவிதமாக வெடித்தது. இந்த விபத்தில் அங்கு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எப்) வீரர்கள் இருவர் லேசான காயமடைந்தனர்.
காயமடைந்த வீரர்கள் உடனடியாக முதலுதவி சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். துப்பாக்கியை வைத்திருந்த பயணியிடம் உரிய உரிமம் உள்ளதா என்பது குறித்தும், பாதுகாப்பு விதிமீறல்கள் ஏதேனும் நடந்துள்ளதா என்பது குறித்தும் விமான நிலைய காவல் துறையினரும் சிஐஎஸ்எப் அதிகாரிகளும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவத்தால் வாராணசி விமான நிலையத்தில் நேற்று காலை சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.















