அதானி மீதான புகாரில் திருப்பம்: அமெரிக்காவின் குற்றப்பத்திரிகையில் அதானி பெயர் இல்லை என குழுமம் விளக்கம்

0
20

அதானி விவகாரம் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் நாடாளுமன்ற இரு அவைகளும் நேற்று முடங்கின. இதற்கிடையே, அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் கவுதம் அதானியின் பெயர் இல்லை என அதானி குழுமம் விளக்கம் அளித்துள்ளது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர் கடந்த 25-ம் தேதி தொடங்கியது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவை நேற்று காலையில் கூடியது. அப்போது அவை நடவடிக்கைகளை ஒத்தி வைத்துவிட்டு, அதானி விவகாரம், மணிப்பூர் நிலவரம், டெல்லியில் அதிகரித்து வரும் குற்றம் மற்றும் உ.பி.யின் சம்பல் வன்முறை தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி, மாநிலங்களவை தலைவர் ஜெகதீப் தன்கரிடம் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 18 நோட்டீஸ்களை வழங்கினர். இவை அனைத்தையும் ஏற்க ஜெகதீப் தன்கர் மறுத்து விட்டார்.

இதையடுத்து, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் நிலவியதால் அவை ஒத்தி வைக்கப்பட்டது. மீண்டும் அவை கூடியபோதும் இதே நிலை நீடித்தது. இதனால் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. மக்களவையிலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் அடுத்தடுத்து இரண்டு முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் அவை நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.

அதானியை சிறையில் அடையுங்கள்: நாடாளுமன்ற வளாகத்தில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி கூறியதாவது: அதானி குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொள்வார் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? அப்படியானால் எந்த உலகத்தில் நீங்கள் வாழ்கிறீர்கள்? சிறிய, சிறிய குற்றங்களுக்காக நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்படுகின்றனர். ஆனால், ஆயிரக்கணக்கான கோடிகளை லஞ்சமாக அளித்ததாக அமெரிக் காவால் குற்றம்சாட்டப்படும் நபரை மத்திய அரசு பாதுகாக்கிறது. அதானியை உடனடியாக கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இவ்வாறு ராகுல் கூறினார்.

அதானி குழுமம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதானி குழுமத்தின் தலைவர் கவுதம் அதானி மற்றும் அதானி கிரீன் எனர்ஜி நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக உள்ள அவரது சகோதரர் மகன் சாகர் அதானி மூத்த நிர்வாகி வினீத் ஜெயின் ஆகியோர் மீது அமெரிக்க வெளிநாட்டு ஊழல் நடைமுறை சட்டத்தை (எப்சிபிஏ) மீறியதாக அமெரிக்க நீதித் துறையின் குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படவில்லை. மேலும், அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை (எஸ்இசி) ஆணையத்தின் சிவில் புகாரிலும் அவர்கள் மீது நேரடி குற்றச்சாட்டு தெரிவிக்கப்படவில்லை.

ஆனால், அதானி குழுமத்தின் 3 இயக்குநர்களும் ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டதாக இந்திய மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த பல்வேறு ஊடகங்கள் தவறான புரிதலுடன் பொறுப்பற்ற வகையில் செய்திகளை வெளியிட்டு வருகின்றன. எனவே, அதானி கிரீன் எனர்ஜி நிறுவனம் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் அறிக்கைகள் தவறானவை. அமெரிக்க குற்றப்பத்திரிகை லஞ்ச குற்றச்சாட்டை பற்றி மட்டுமே விவாதிக்கிறது. அதானி நிர்வாகிகளிடம் இருந்து இந்திய அரசின் அதிகாரிகள் லஞ்சம் பெற்றதற்கான எந்த ஆதாரத்தையும் அது வழங்கவில்லை என்பதை கருத்தில் கொள்ள வேண்டும். இவ்வாறு அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

இதனிடையே அதானி விவகாரம் குறித்து முன்னாள் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி கூறும்போது, “அமெரிக்க நீதிமன்றத்தின் குற்றச்சாட்டை படித்துப் பார்த்தேன். மொத்தம் 5 குற்றச்சாட்டுகள் கூறப்பட்டுள்ளன. அதில், 1 மற்றும் 5-வது குற்றச்சாட்டுகள்தான் மற்றவைகளைவிட முக்கிய மானவை. ஆனால், அதில் அதானி பெயரோ அல்லது அவரது உறவினர் சாகர் அதானி பெயரோ இடம்பெறவில்லை. வெளிநாட்டு ஊழல் நடைமுறைச் சட்டத்தை மீறியதற்கான முதல் குற்றச்சாட்டில் இவர்களின் பெயர் இல்லை” என்றார்.

இந்தியாவின் வளர்ச்சியை தடுக்க சதி: மூத்த வழக்கறிஞரும், மாநிலங்களவை முன்னாள் எம்.பி.யுமான மகேஷ் ஜெத்மலானி கூறியதாவது: இந்தியாவில் சோலார் எரிசக்தி ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக அதானி குழுமம் லஞ்சம் கொடுத்ததாக அமெரிக்க நீதித் துறை குற்றம்சாட்டி உள்ளது. ஆனால் இது தொடர்பாக எந்த ஆதாரங்களையும் வெளியிடவில்லை. இந்தியாவிலும், வெளிநாட்டிலும் மிகவும் பயனுள்ள வணிக நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் இந்திய குழுமத்துக்கு எதிரான குற்றச்சாட்டை காங்கிரஸ் கட்சி கண்மூடித்தனமாக நம்பி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது இந்தியாவின் நலனுக்கு உகந்ததல்ல.

இந்தியாவின் வேகமான பொருளாதார எழுச்சியை சீர்குலைக்க முயலும் சக்திகள் அமெரிக்க நீதிமன்றங்களை ஆயுதமாக பயன்படுத்துகின்றன. எந்த ஆதாரத்தின் அடிப்படையில் அமெரிக்க நீதிபதி இந்த குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார் என்பது தெரியவில்லை. அதானி மீது விசாரணை கோருவதற்கு முன்பாக அதற்கான நம்பகமான ஆதாரங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here