தமிழகத்தில் பாமாயில், துவரம் பருப்பு விநியோகிப்பதில் சிக்கல்: ஊழியர்கள் அதிருப்தி

0
230

தமிழக அரசின் சார்பில், பொது விநியோகத்திட்ட பொருட்களான அரிசி, சர்க்கரை, கோதுமை தவிர, சிறப்பு பொது விநியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் ஒரு கிலோ துவரம் பருப்பு, பாமாயில் வழங்கப்படுகிறது.

இந்நிலையில், கடந்த மே மாதம் முதல் இப்பொருட்கள் கிடைப்பதில் தேக்க நிலை ஏற்பட்டுள்ளது. மாதாமாதம் தேவைப்படும் அளவு பொருட்கள் ஒப்பந்ததாரர்களிடம் இருந்து பெறப்பட்டு, கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டு கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. இந்நிலையில், கடந்த மே மாதம் போதிய அளவில் பாமாயில், பருப்பு வழங்கப்படவில்லை.

அப்போது மக்களவை தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக ஒப்பந்தம் கோருவதில் சிக்கல் நிலவியதாக தெரிவிக்கப்பட்டு, மறுமாதம் அதாவது ஜூன் மாதத்தில் சேர்த்து வாங்கிக் கொள்ள பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டனர். இதனால், இரண்டு மாதங்களுக்கான பாமாயில், துவரம்பருப்பும் சேர்த்து பொதுமக்கள் வாங்கினர். வழக்கமான ஒதுக்கீட்டு அளவைவிட கூடுதல் ஒதுக்கீடு அளிக்கப்பட்டும், கடைகளில் குறிப்பிட்ட சதவீதத்தினருக்கு மே மாத பொருட்கள் மட்டுமே கிடைத்தது.

இதையடுத்து, ஜூன் மாத பொருட்களை, ஜூலை அதாவது இந்த மாதம் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டது. ஆனால், கடந்த மாத நிலையே இந்த மாதமும் ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் பலரும் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து, நியாயவிலைக்கடை ஊழியர்கள் கூறியதாவது: அரசு ஒதுக்கீடு அந்தந்த மாதத்துக்கான அளவே வழங்கப்படுகிறது. இதில் எப்படி கடந்த மாதத்துக்கான பொருளை தரமுடியும். விற்பனை முனைய இயந்திரத்தில், கடந்த மாதத்துக்கான ஒதுக்கீட்டை தருவதற்கு தனியான வசதி உள்ளது. அதை பயன்படுத்தி குறிப்பிட்ட அளவே பொருட்களை வழங்க முடியும். பொதுமக்கள் வந்து கேட்டால், நீங்களே சமாளியுங்கள் என அதிகாரிகள் கூறிவிடுகின்றனர்.

ஆனால், எல்லோரையும் எங்களால் சமாளிக்க முடியாது. சிலர் எங்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபடுகின்றனர். பொருட்கள் சரியாக அனுப்பப்படாத நிலையில், அதிகாரிகள் கடைகளை நேரத்துக்கு திறக்க வேண்டும் என்று அறிவுறுத்தி எங்கள் மீது பழியை சுமத்தி அதிகாரிகள் தப்பிக்கின்றனர்.இவ்வாறு தெரிவித்தனர்.