100 நாள் வேலை, பதவிக்காலம் பறிபோகும் என்பதால் நகர்ப்புறத்தோடு ஊராட்சிகளை இணைக்க எதிர்ப்பு

0
41

ஊரகப்பகுதிகளில் 100 நாள் வேலை திட்டம் பாதிக்கும் என்பதால் நகர்ப்புற உள்ளாட்சிகளோடு ஊராட்சிகளை இணைக்கவும் தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் பறிபோகும் என்பதால் உள்ளாட்சி தேர்தலை முன்கூட்டியே நடத்தவும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

தமிழகத்தில் உள்ள 6 வகையான உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது. மாநில தேர்தல் ஆணையம் இந்த தேர்தல்களை நடத்துகிறது. தற்போது பதவியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில், 2019-ம் ஆண்டு அதிமுக ஆட்சியின்போது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது.

இதற்கிடையில், ஏற்கெனவே இருந்த திருநெல்வேலி, வேலூர், காஞ்சிபுரம், விழுப்புரம் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 5 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. இதனால் பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் வார்டு மறுவரையறையில் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட 9 மாவட்டங்களை தவிர்த்து பிற 27 மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றியம், மாவட்ட ஊராட்சி உள்ளிட்டவற்றுக்கு மட்டுமே தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது. இந்த தேர்தல் என்பது 2019-ம் ஆண்டு டிசம்பர் மாதம் நடந்தது.

தொடர்ந்து, நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கான தேர்தலும் நடத்தப்படவில்லை. இந்நிலையில், 2021 சட்டப்பேரவை தேர்தலில், திமுக வெற்றி பெற்றது. இதையடுத்து, 9 மாவட்ட ஊரக உள்ளாட்சிகளுக்கு 2021-ம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடத்தப்பட்டது. இதனால், 27 மாவட்டங்கள் மற்றும் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சிக்கு தேர்வானவர்களுக்கு இடையில் 21 மாதங்கள் பதவிக்கால இடைவெளி ஏற்பட்டது.

இதனால் 2019 டிசம்பரில் தேர்வானவர்களுக்கு இந்தாண்டு இறுதியிலும், 2021-ல் தேர்வானவர்களுக்கு வரும் 2026-ம் ஆண்டிலும் பதவிக்காலம் முடிகிறது. இந்த இடைவெளி தமிழக அரசுக்கு பெரும் சிக்கலாக உள்ளதால், அதை சரிசெய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

ஒன்று 2019-ல் தேர்வான 27 மாவட்டங்களின் ஊராட்சிகளில் உள்ள பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்த பின், தனி அதிகாரி நியமித்து, 2026-ல் 9 மாவட்ட ஊராட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிந்ததும் மொத்தமாக தேர்தல் நடத்த வேண்டும். அல்லது, 2021-ல் தேர்தலை சந்தித்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளை முன்கூட்டியே கலைத்துவிட்டு, 27 மாவட்டங்களுடன் சேர்த்து இந்தாண்டு டிசம்பரிலேயே தேர்தலை நடத்த வேண்டும். இதில் ஏதேனும் ஒன்றை அரசு செயல்படுத்த வேண்டும்.

இதற்கிடையில், 2019-ல் தேர்வானவர்கள் பதவிக்காலம் முடிய இன்னும் 4 மாதங்களே உள்ளதால் தேர்தல் நடத்துவது குறித்து முதல்வர், மூத்த அமைச்சர்கள், அதிகாரிகள் மட்டத்தில் ஆலோசனை நடந்து வருகிறது. விரைவில் இதுகுறித்த முடிவு எட்டப்படும் என்று தெரிகிறது.

இதற்கிடையே நாமக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி, திருவண்ணாமலை மாநகராட்சிகளை உருவாக்கும் அறிவிப்பு பேரவையில் வெளியிடப்பட்டது. அப்படி உருவாகும்போது அருகில் உள்ள ஊராட்சிகளும் மாநகராட்சியுடன் இணைக்கப்படும். இதனால் 100 நாள் வேலை திட்டம் பறிபோகும் என்பது உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் இணைப்பு குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்கப்படும். மக்கள் விரும்பாவிட்டால் இணைக்கப்படாது என்றும் அமைச்சர் கே.என்.நேரு பேரவையில் தெரிவித்தார்.

இதுகுறித்து செங்கல்பட்டு மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்களின் கூட்டமைப்பு தலைவர் சுரேஷ் கூறியதாவது:

ஊராட்சிகளை பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளுடன் இணைக்கும்போது, அந்த பகுதிகளின் நிலத்தின் மதிப்பு அதிகரிக்கும். மக்களுக்கு பல நல்ல திட்டங்களின் பயன் கிடைக்கும். 100 நாள் வேலை திட்டம் தற்போது பேரூராட்சிகளில் இணைக்கப்பட்டாலும் நீட்டிக்கப்பட்டு வழங்கப்படுகிறது. 2026-ல் தான் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முன்கூட்டியே உள்ளாட்சிகளை கலைக்க அரசு நடவடிக்கை எடுக்காது என்று நம்புகிறோம். இதுகுறித்து அரசுக்கு கடிதமும் கொடுத்துள்ளோம். மீறி அறிவித்தால் நீதிமன்றத்தை நாடுவோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.