நாளை சட்டப்பேரவை அலுவல் ஆய்வு கூட்டம்

0
169

சட்டப்பேரவையில் துறைகள் தோறும் மானிய கோரிக்கை விவாதத்தை எத்தனை நாட்கள் நடத்துவது என்பதை முடிவு செய்வதற்கான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை பேரவைத் தலைவர் மு. அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது.

தமிழக சட்டப்பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் கடந்த பிப்.12-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. தொடர்ந்து பிப்.15-ம் தேதி வரை ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதானவிவாதம் நடைபெற்றது. இறுதிநாளில் முதல்வர் மு.க.ஸ்டாலின் விவாதத்துக்கு பதிலளித்தார்.

இதையடுத்து, இந்த 2024-25-ம் நிதியாண்டுக்கான பொது பட்ஜெட்டை அமைச்சர் தங்கம் தென்னரசு பிப்.19-ம் தேதியும், வேளாண் பட்ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பிப்.20-ம் தேதியும் தாக்கல் செய்தனர். அதன்பின், நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் பிப்.22-ம் தேதி வரை நடைபெற்றது. இறுதி நாளில் நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சர்கள் விவாதத்துக்கு பதிலளித்தனர்.

இதையடுத்து, மக்களவை தேர்தல் காரணமாக மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதம் நடத்தப்படாமல், சட்டப்பேரவை தள்ளிவைக்கப்பட்டிருந்தது. மக்களவை தேர்தல் முடிந்த நிலையில், தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால், கடந்த ஜூன் 7-ம் தேதி சட்டப்பேரவைத் தலைவர் மு.அப்பாவு, மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக ஜூன் 24-ம் தேதி சட்டப்பேரவை கூடும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, மானிய கோரிக்கைகள் விவாதத்துக்காக சட்டப்பேரவைக் கூட்டத்தை எத்தனைநாட்கள் நடத்துவது என்பது தொடர்பான அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நாளை (ஜூன் 12) பகல் 12 மணிக்கு பேரவைத்தலைவர் மு.அப்பாவு தலைமையில் நடைபெறுகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின், மூத்த அமைச்சர்கள், திமுக உள்ளிட்ட கட்சிகளின் பிரதிநிதிகள், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் கொறடா உள்ளிட்டோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்தின் முடிவில், எத்தனை நாட்கள் பேரவை கூட்டம் நடைபெறும் என்பது குறித்த அறிவிப்பை பேரவைத்தலைவர் வெளியிடுவார்.