ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்

0
51

மின்கட்டணங்களை ஆன்லைன் மூலம் செலுத்துபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்தஏப்ரல் மாதம் வரை 70 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி உள்ளனர்.

வீடுகளில் பயன்படுத்தப்படும் மின்சாரம் 2 மாதங்களுக்கு ஒருமுறை கணக்கு எடுக்கப்படுகிறது. இந்தக் கட்டணத்தை நுகர்வோர்முன்பு மின்வாரிய அலுவலகங்களுக்கு நேரில் சென்று கட்டி வந்தனர்.

செயலிகள் வழியாக.. பின்னர், வாடிக்கையாளர்களின் வசதிக்காக மின்னணு முறையில் பணம் செலுத்தும் வசதியை மின்வாரியம் அறிமுகப்படுத்தியது. இதன்படி, நுகர்வோர்ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தை செலுத்தலாம். மேலும், கூகுள் பே, யூபிஐ உள்ளிட்ட செயலிகள் வழியாக செலுத்தலாம்.

ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்த மின்நுகர்வோர் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால், ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது.

ரூ.2,010 கோடி வருவாய்: இதன்படி, கடந்த 2023-ம் ஆண்டு ஏப்ரல் வரை 57.25 லட்சம் மின்நுகர்வோர் ஆன்லைன் மூலம் மின்கட்டணத்தைச் செலுத்தி உள்ளனர். இந்நிலையில், நடப்பு ஆண்டு 2024 ஏப்ரல் வரை 70.20 லட்சம் பேர் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தி உள்ளனர்.

இதேபோல், கடந்த ஆண்டு மின்கட்டணமாக ரூ.1,550 கோடி வசூல் ஆனது. இது இந்த ஆண்டு ரூ.2,010 கோடியாக அதிகரித்துள்ளது.

குறிப்பாக, சென்னை, திருச்சி,கோவை மற்றும் மதுரை ஆகியநகரங்களில் மின்நுகர்வோர் அதிகளவில் மின்கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தி உள்ளனர். தமிழக பிற மாவட்டங்களிலும் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்துவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.