ஜம்முவிலிருந்து 176 பஸ்களில் புறப்பட்ட 5 ஆயிரம் பண்டிட்களுக்கு பலத்த பாதுகாப்பு

0
124

ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசம் கந்தர்பால் மாவட்டம் துல்முல்லா கிராமத்தில் கீர் பவானிஅல்லது ரங்யா தேவி கோயில்உள்ளது. தலைநகர் ஸ்ரீநகரிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள கீர் பவானியை காஷ்மீர் பண்டிட்கள் தங்கள் குலதெய்வமாக வழிபடுகின்றனர். அங்கு வரும் 14-ம்தேதி வருடாந்திர திருவிழா நடைபெற உள்ளது. இந்த ஆண்டு திருவிழாவில், நாட்டின் பல்வேறு பகுதிகள் மட்டுமல்லாது வெளிநாடுகளில் வசிக்கும் காஷ்மீர் பண்டிட்கள் உட்பட 80 ஆயிரம் பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவை முன்னிட்டு காஷ்மீருக்கு வரும் இந்துக்கள், குப்வாரா மாவட்டம் டிக்கர், அனந்த்நாக் மாவட்டம் லக்திபோரா அய்ஷ்முகம், குல்காம் மாவட்டத்தின் மாதா திரிபுரசுந்தரி தேவ்சர் மற்றும் மாதா கீர் பவானி மன்ஸ்கம் ஆகிய கோயில்களுக்கும் செல்வார்கள். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதனிடையே, ஜம்முவின் நக்ரோட்டா பகுதியிலிருந்து சுமார் 5 ஆயிரம் இந்துக்கள் 176 பஸ்களில் கீர் பவானி கோயிலுக்கு நேற்று புறப்பட்டனர். ஜம்மு மண்டல ஆணையர் ரமேஷ் குமார், நிவாரண பிரிவு ஆணையர் டாக்டர் அர்விந்த் கர்வானி மற்றும் முக்கிய காஷ்மீர் பண்டிட் தலைவர்கள் உள்ளிட்டோர் இந்த 4 நாள் புனிதப் பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தனர். இந்த பஸ்களுக்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜம்மு பகுதியில் கடந்த 4 நாட்களில் மட்டும் 3 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றுள்ளன. கடந்த 9-ம் தேதி ஷிவ் கோரி கோயிலில் இருந்து கத்ராவில் உள்ள மாதா வைஷ்ணவ தேவி கோயிலுக்கு பஸ்ஸில் புறப்பட்ட யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். ரியாசி பகுதியில் நடந்த இந்த தாக்குதலால் பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 9 பேர் உயிரிழந்தனர். 41 பேர் காயமடைந்தனர்.

தோடா மாவட்டம், பதர்வா-பதான்கோட் சாலையில் சத்தர்கலா பகுதியில் உள்ள சோதனைச் சாவடி மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் 6 வீரர்கள் காயமடைந்தனர்.

கதுவா மாவட்டத்தில் சர்வதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ள ஒரு கிராமத்தில் நேற்று முன்தினம் இரவு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் ஒருவர் காயமடைந்தார். இதையடுத்து பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் உயிரிழந்தனர். இதில் சிஆர்பிஎப் வீரர் ஒருவரும் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.