வட்டாட்சியர் அனுமதி பெற்று குளம், ஏரிகளில் இலவசமாக மண் எடுக்கலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

0
96

கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களில் இருந்து விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்யவும் கட்டணம் இல்லாமல் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அந்தந்த வட்டாட்சியரிடமே இணையவழியில் அனுமதி பெறும் புதிய நடைமுறை அமல்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து அரசு நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது: பொதுப்பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், கால்வாய்களிலிருந்து விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்யவும் மண், வண்டல்மண், களிமண் எடுக்க மாவட்ட ஆட்சியர்களால் அனுமதி அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த இரண்டுஆண்டுகளில் இருந்த நல்ல மழைப்பொழிவால் நீர்த்தேக்கங்கள் மற்றும் ஏரிகளில் நீர் தேங்கி இருந்தநிலையில், விவசாயிகள், மண்பாண்டம் செய்பவர்கள் போன்றோர் மண் எடுத்து பயன்பெற முடியாத சூழ்நிலை இருந்தது.

தற்போது இந்த நீர் நிலைகளில் நீர் இருப்பு குறைவாக இருப்பதால், இவற்றை தூர்வாரி, கொள்ளளவை உயர்த்தினால், வரும் மழைக்காலத்தில் அதிக அளவு மழை நீரை சேமிக்க முடியும்.

தற்போதுள்ள விதிகளில், விவசாய பயன்பாட்டுக்கும், பானைத் தொழில் செய்வதற்கும் அதே கிராமத்திலோ அல்லது அருகில் உள்ள கிராமப் பகுதியிலோ உள்ள நீர்நிலைகளிலிருந்து மட்டுமே மண்எடுக்க மேற்படி வழிவகை செய்யப்பட்டுள்ளது. இதனால், பல தகுதியான பயனாளிகளுக்கு தேவையான மண் கிடைக்காத நிலை உள்ளது. மேலும், மேற்கூறிய பயன்பாடுகளுக்கு அனுமதி பெற சம்மந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் சான்றிதழ் பெற்று, மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து அனுமதி பெற்று மண் எடுக்க இயலும். இதனால், பயனாளிகளுக்கு சிரமங்கள் ஏற்படுகின்றன.

எனவே, விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்காக மேற்கூறிய பிரச்சினைகளை களைந்து புதிய எளிதானநடைமுறையை வகுத்திட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தினார். இதனடிப்படையில், சிறுகனிம விதிகளில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, பொதுப்பணித் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறை பராமரிப்பில் உள்ள கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், நீர்த்தேக்கங்கள், மற்றும்கால்வாய்களிலிருந்து கட்டணம் இல்லாமல் விவசாயப் பயன்பாட்டுக்கும் மற்றும் பானைத் தொழில் செய்வதற்கும் மண் எடுக்க சம்மந்தப்பட்ட வட்டாட்சியர்களே இணைய வழியில் அனுமதி வழங்கும் வகையில் புதிய நடைமுறை செயல்படுத்தப்படும்.

இது மட்டுமன்றி, விவசாயிகள் தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையிலும் தேவைப்படும் மண்ணை எடுத்துக் கொள்ளவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறைகளை பயன்படுத்தி விவசாயிகள் அனைவரும் இணைய வழியில் விண்ணப்பம் செய்து, சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அளவிலேயே அனுமதிகளை எளிதில் பெற்று, தாம் வசிக்கும் வட்டத்தில் உள்ள எந்த ஒரு நீர்நிலையில் இருந்தும் தேவைப்படும் மண்ணை எடுத்து, தமது வயல்களை வளம் பெறச் செய்யலாம்.

இதன்மூலம் விவசாயிகள் எளிதில் பயன்பெறுவதோடு, மாநிலத்தில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமிக்க முடியும்.