பிரதமர் தனது அணுகுமுறையை மாற்ற வேண்டும்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பேச்சு

0
109

பிரதமர் மோடி தனது அணுகு முறையை மாற்றிக் கொள்ள வேண்டும் என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வயநாட்டில் நேற்று தொண்டர்களிடையே பேசும்போது தெரிவித்தார்.

தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க முதன்முறையாக கேரள மாநிலம் வயநாடு தொகுதிக்கு நேற்று வருகை தந்தார். வயநாடு மற்றும் ரேபரேலி என இரண்டு தொகுதியில் போட்டியிட்ட ராகுல் அவ்விரண்டிலும் வெற்றிபெற்றார். இதையடுத்து, அவர் எந்த தொகுதியில் தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்வார் என்பது இன்னும் புரியாத புதிராகவே உள்ளது.

இந்த நிலையில், வயநாடு தொகுதிக்குட்பட்ட எர்னாடு சட்டப்பேரவை தொகுதிக்கு வருகை தந்த ராகுல் அங்குள்ள வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தற்போது மத்தியில் ஆட்சி அமைத்துள்ள தேசிய ஜனநாயக கூட்டணி இயல்பான கூட்டணி அல்ல. அதனால் தன்னிச்சையாக செயல்பட முடியாது.

பிரதமர் மோடியை பொருத்தவரையில் இனியாவது அவர் தனது அணுகுமுறையை மாற்றிக்கொள்ள வேண்டும். ஏனென்றால், இந்திய மக்கள் அவருக்கு ஒரு தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர். அயோத்தி மக்கள் கூட நாங்கள் வெறுப்புக்கு எதிரானவர்கள் என்ற செய்தியை பாஜகவுக்கு தெளிவுபடுத்தி விட்டனர்.

எங்களைப் பொருத்தவரையில் நாங்கள் ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாக செயல்படுவோம். ஏழைகளுக்கு ஆதரவான, கருணையான எங்களின் பார்வை தொடரும். இந்திய மக்களுக்கு ஏற்ற ஒரு மாற்று திட்டத்தை எதிர்க்கட்சி கூட்டணி தயார் செய்யும். அந்த தொலைநோக்கு பார்வைக்காக போராடுவோம்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன்படி ஒருவர் ஒரே நேரத்தில் ஒரு எம்.பி. பதவியை மட்டுமே வகிக்க முடியும் என்பதால், வயநாடுஅல்லது ரேபரேலி தொகுதி ஏதேனும் ஒன்றை விட்டுத்தர வேண்டிய இக்கட்டான சூழ்நிலையில் உள்ளேன். இது குறித்து மக்களுடன் கலந்துபேசி இறுதி முடிவை அறிவிப்பேன். இந்திய ஏழைகள் மற்றும் வயநாடு மக்கள் எனக்கு கடவுள் போன்றவர்கள். எனவே, அவர்களின் விருப்பப்படியே செயல்படுவேன்.

இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.