குஜராத்தின் சோம்நாத் கோயில் குடமுழுக்கு நேற்று நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தினார்.
குஜராத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தில் அமைந்துள்ள சோம்நாத் கோயில், முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ராஜேந்திர பிரசாத், சர்தார் படேல் உள்ளிட்டோரால் புதுப்பிக்கப்பட்டு கடந்த 1951-ம் ஆண்டு திறக்கப்பட்டது. இதன் 75-வது ஆண்டு நிறைவை ஒட்டி சோம்நாத் கோயிலில் நேற்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று சிறப்பு பிரார்த்தனைகள், வழிபாடுகளை நடத்தினார்.
கோயில் குடமுழுக்கு விழா நடைபெற்றபோது ஹெலிகாப்டர் மூலம் மலர்கள் தூவப்பட்டன. மேலும் விமானப் படையின் சாகச நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் கோயில் அறக்கட்டளை அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி பார்வையிட்டார். அப்போது அவர் சோம்நாத் கோயில் நினைவு தபால் தலையை வெளியிட்டார்.
பின்னர் கோயில் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது: ஒரு பக்தனாக சோம்நாத் கோயிலில் பலமுறை வழிபாடு நடத்தி உள்ளேன். தற்போது குடமுழுக்கு விழாவில் பங்கேற்றது மிகுந்த பரவசமாக இருக்கிறது. ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும் சோம்நாத் கோயில் கம்பீரமாக எழுந்து நிற்கிறது.
கடந்த 1947-ம் ஆண்டில் இந்தியா விடுதலை அடைந்தது. அப்போது சுமார் 500-க்கும் மேற்பட்ட சமஸ்தானங்களை அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் படேல் ஒன்றிணைத்தார். அதோடு சோம்நாத் கோயிலையும் அவர் கட்டி எழுப்பினார். முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கடந்த 1998-ம் ஆண்டு மே.11-ம் தேதி பொக்ரானில் அணு சக்தி சோதனை நடத்தப்பட்டது. மே 13-ம் தேதி மேலும் 2 அணு சக்தி சோதனைகள் நடத்தப்பட்டன.
அப்போது இந்தியாவின் வலிமையை உலக நாடுகளுக்கு நமது விஞ்ஞானிகள் தெளிவாக உணர்த்தினர். பல்வேறு நாடுகள் இந்தியா மீது பொருளாதார தடைகளை விதித்தன. ஆனால் தடைகளைத் தாண்டி இந்தியா அதிவேகமாக முன்னேறியது. எந்தவொரு உலக சக்தியாலும் இந்தியாவை அடிபணிய வைக்க முடியாது. நிலவின் தென்துருவத்தில் கால் பதித்த முதல் நாடு என்ற பெருமையை நாம் பெற்றிருக்கிறோம். நிலவில் நமது ரோவர் தரையிறங்கிய பகுதிக்கு சிவசக்தி முனை என்று பெயர் சூட்டி உள்ளோம்.
மஹ்மூத் கஸ்னவி, அலாவுதீன் கில்ஜி உள்ளிட்டோர் சோம்நாத் கோயில் மீது தாக்குதல் நடத்தினர். அந்நிய படையெடுப்பாளர்களால் இந்த கோயில் மீது பலமுறை தாக்குதல் நடத்தப்பட்டது. அப்போதெல்லாம் சிவபக்தர்கள் கோயிலை மீண்டும், மீண்டும் கட்டி எழுப்பினர். நாடு சுதந்திரம் அடைந்தபிறகு சர்தார் படேல், ராஜேந்திர பிரசாத், கே.எம்.முன்ஷி உள்ளிட்டோர் சோம்நாத் கோயிலை பிரம்மாண்டமாக கட்டி எழுப்பினர். அவர்களை இந்த நேரத்தில் நினைவு கூர்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.















