கோவையில் ஜூன் 14-ம் தேதிநடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த திமுக முப்பெரும் விழா, ஜூன் 15-ம் தேதி கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் என பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த ஜூன் 8-ல் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற திமுக மக்களவை உறுப்பினர்கள் கூட்டத்தில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதன்படி, கருணாநிதியின் நூற்றாண்டு விழா நிறைவு, 40 மக்களவை தொகுதிகளிலும் வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விழா, வெற்றிக்கு கட்சியை வழிநடத்திச்சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழா ஏற்கெனவே ஜூன் 14-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த முப்பெரும் விழா, ஜூன் 14-ம் தேதிக்குப் பதிலாக, ஜூன் 15-ம் தேதி மாலை 4 மணிக்கு கோயம்புத்தூர் கொடிசியா மைதானத்தில் நடைபெறுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில் கூட்டணி கட்சித் தலைவர்கள், மக்களவை எம்பிக்களும் பங்கேற்கின்றனர்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.