நடப்பு மகளிர் பிரீமியர் லீக் கிரிக்கெட் சீசனில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இந்நிலையில், அந்த அணி வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி. ஐபிஎல் கிரிக்கெட்டில் அவர் ஆர்சிபி ஆடவர் அணிக்காக விளையாடுகிறார்.
வதோதராவில் வியாழக்கிழமை நடைபெற்ற மகளிர் பிரீமியர் லீக் – 2026 இறுதி ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் ஆர்சிபி அணிகள் விளையாடின. இதில் முதலில் பேட் செய்த டெல்லி அணி 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 203 ரன்கள் எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை ஆர்சிபி விரட்டியது.
இறுதிப் போட்டி, பெரிய இலக்கு என்ற அழுத்தம் எதுவும் இல்லாமல் மிக நேர்த்தியாக இலக்கை கடந்தது ஆர்சிபி. அதற்கு முக்கிய காரணம் அந்த அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா மற்றும் ஜார்ஜியா வோலின் ஆட்டம்.
இருவரும் இரண்டாவது விக்கெட்டுக்கு 92 பந்துகளில் 165 ரன்கள் சேர்த்தனர். அதன் பலனாக 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 204 ரன்கள் எடுத்து இரண்டாவது முறையாக மகளிர் பிரீமியர் லீக்கில் சாம்பியன் பட்டம் வென்றது ஆர்சிபி.
இந்நிலையில், ஆர்சிபி அணியின் (ஆடவர்) முக்கிய வீரராக அறியப்படும் விராட் கோலி, மகளிர் பிரீமியர் லீக்கில் பட்டம் வென்ற ஆர்சிபி வீராங்கனைகளுக்கு தனது வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.
“மீண்டும் சாம்பியன் பட்டம் வென்றுள்ளீர்கள். இதனால் ஆர்சிபி கொடி உயர பறக்கிறது. இதை எண்ணி நீங்கள் ஒவ்வொருவரும் பெருமிதம் கொள்ளலாம். அபார வெற்றி பெற்ற ஸ்மிருதி மந்தனா மற்றும் ஒட்டுமொத்த அணியினருக்கும், நிர்வாக குழுவுக்கும் எனது வாழ்த்துகள். இதற்கு நீங்கள் தகுதியானவர்கள். அதில் சந்தேகம் இல்லை. இந்த வெற்றி தருணத்தை அனுபவியுங்கள். அன்பான ஆர்சிபி ரசிகர்களின் அன்பை தழுவுங்கள்” என விராட் கோலி தனது வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஐபிஎல் 2025-ம் ஆண்டு சீசனில் ஆர்சிபி ஆடவர் அணி முதல் முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. டி20 உலகக் கோப்பை தொடருக்கு பிறகு தொடங்கவுள்ள ஐபிஎல் 2026-ம் ஆண்டுக்கான சீசனில் ஆர்சிபி அணிக்காக மீண்டும் விராட் கோலி களம் காண உள்ளார்.













