தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் எடுப்பதில் எந்த தாமதமும் இல்லை: அரசு தரப்பில் விளக்கம்

0
26

தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் எந்த தாமமும் இல்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்களவையில் கடந்த 10-ம் தேதி ரயில்வே திருத்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் தம்பிதுரை, தமிழகத்தில் பல்வேறு ரயில் திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தாமதம் இருப்பதாக குற்றம்சாட்டியிருந்தார்.

இதற்கு தமிழக அரசு பதில் அளித்துள்ளது. அதன் விவரம்: தமிழகத்தில் ரயில்வே திட்டங்களுக்கு மொத்தமாக 2,197 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த ஏற்கெனவே தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. முக்கியமான 17 திட்டங்களுக்கு கையகப்படுத்த வேண்டிய 1,253 ஹெக்டேர் நிலங்களில், 1,145 ஹெக்டேர் நிலங்களுக்கான பணிகள் முடிந்து (அதாவது 91%) நிலம் ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திண்டிவனம் – நகரி, மதுரை – தூத்துக்குடி, மயிலாடுதுறை – திருவாரூர், மன்னார்குடி – நீடாமங்கலம் அகல ரயில் பாதை திட்டங்கள், கன்னியாகுமரி – நாகர்கோவில் அகல ரயில் பாதை இரட்டிப்பாக்குதல், தூத்துக்குடி – மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல ரயில் பாதை 1-வது கட்டம், கொருக்குப்பேட்டை – எண்ணூர் 4-வது வழித்தடம், பட்டுக்கோட்டை நான்குமுனை சந்திப்பு, சென்னை கடற்கரை – கொருக்குப்பேட்டை 3, 4-வது வழித்தடம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களுக்க 100 சதவீதம் நிலம் கையகப்படுத்தும் பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்வே நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை – திண்டிவனம் புதிய அகல ரயில்பாதை திட்டத்துக்கு 229 ஹெக்டேர் நிலங்களை கையகப்படுத்த 2011-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டும் ரயில்வே துறை நிதி ஒதுக்காததால், பணிகள் முடங்கியுள்ளன. தூத்துக்குடி – மதுரை (அருப்புக்கோட்டை வழி) புதிய அகல ரயில் பாதை 2-ம் கட்ட திட்டத்துக்காக 702 ஹெக்டேர் நிலங்களுக்கு கடந்த 2023-ல் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி ஒதுக்கப்படவில்லை .

மன்னார்குடி – பட்டுக்கோட்டை (41 கி.மீ.), தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை (51 கி.மீ.) ஆகிய திட்டங்களுக்கு தற்போதைய நில மதிப்பு அடிப்படையில் அரசின் நிர்வாக அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகம் முன்மொழிவுகளை தயாரித்து வருகிறது. எனவே. ரயில்வே துறை திட்டங்களுக்கு நிலம் கையகப்படுத்துவதில் தமிழக வருவாய் துறையால் எந்த தாமதமும் இல்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here