தமிழகத்தில் மதுபான ஊழல் மூலம் திமுகவுக்கு ரூ.1,000 கோடி கருப்பு பணம் கைமாற்றியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக இதுவரை 10 லட்சம் கையெழுத்துகளைப் பெற்றுள்ளோம். மே மாதத்துக்குள் ஒரு கோடி கையெழுத்துகளைப் பெற்றுவிடுவோம்.
பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் மும்மொழி பயிலும் மாணவர்கள் 15.20 லட்சம் பேர் இருப்பதாகக் கூறியுள்ளார். இவர்கள் சிபிஎஸ்இ பள்ளிகளில்தான் பயின்று வருகின்றனர். மெட்ரிக். பள்ளிகளிலும் மும்மொழி கற்பிக்கின்றனர்.
டெல்லி, சத்தீஷ்கரில் மதுபான ஊழல், அந்த அரசுகளை வெளியேற்றி விட்டது. தமிழகத்தில் மதுபான ஊழலில் ரூ.1,000 கோடி கருப்பு பணம் திமுகவுக்கு கைமாறியுள்ளது. திமுகவுக்கு மதுபானத்தைக் கொண்டுதான் பணம் கிடைக்கிறது. மதுபானம் மூலம் கிடைத்த பணத்தைக் கொண்டுதான் திமுகவினர் 2024 சட்டப்பேரவைத் தேர்தலின்போது செலவு செய்தனர். மறுபடியும் ஆட்சிக்கு வருவதற்கு மதுபானம் மூலம் கிடைக்கும் பணத்தையே பயன்படுத்துவார்கள்.
மும்மொழிக் கொள்கை அவசியமா, மும்மொழிக் படிப்பவர்கள் மட்டும்தான் அறிவு உள்ளவர்களா என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கேட்டிருக்கிறார். அவரது மகன் இந்தியக் குடிமகனா, அமெரிக்க குடிமகனா? அவரது மகன் எந்தப் பள்ளியில் படிக்கிறான்? மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில் படிக்கிறான் என்றால், உங்களுக்கு அறிவில்லை என்றுதானே அர்த்தம்? அமைச்சர்களின் குழந்தைகள், பேரக் குழந்தைகள் மும்மொழியில்தான் படிக்கிறார்கள். அவர்களுக்கு ஒரு நியாயம், பொதுமக்களுக்கு ஒரு நியாயமா?
அரசுப் பள்ளியில் பயிலும் 52 லட்சம் பேர் மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் 56 லட்சம் பேருக்கு சமமான கல்வி கிடைக்க வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ்வழிக் கல்வியை படியுங்கள் என்று பிரதமர் கூறியிருக்கிறார். இது தமிழை ஊக்கப்படுத்தக்கூடிய திட்டம்.
மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் நாடாளுமன்றத்தில் பேசும்போது, “பி.எம்.ஸ்ரீ திட்டம் குறித்து கனிமொழி எம்.பி. என்னிடம் பேசினார். அவருக்கு எல்லாம் தெரியும். அதை இங்கு சுட்டிக்காட்ட விரும்பவில்லை. அது நாகரிகமாக இருக்காது” என்று கூறினார். ஏற்கெனவே கனிமொழி எம்.பி.க்கு குடும்பத்தில் பிரச்சினை. அவர்கள் என்ன பேசினார்கள் என்பதைக் கூறினால், அவருக்கு கூடுதல் பிரச்சினை வரும் என்று கருதி, மத்திய அமைச்சர் சூசகமாக பேசியுள்ளார். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.