தமிழகத்தில் அமைதியாக நடந்து முடிந்த வாக்கு எண்ணிக்கை: தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தகவல்

0
67

தமிழகத்தில் தேர்தல் வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடைபெற்றதாகவும், புகார் எதுவும் வரவில்லை எனவும் தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ தெரிவித்தார்.

மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை தொடர்பாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹூ நேற்று கூறியதாவது: மின்னணு இயந்திரத்தில் கோளாறு இருந்தால் அந்த இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண முயற்சி எடுப்பார்கள். இல்லாவிட்டால் அந்த இயந்திரங்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு, அடுத்தடுத்த சுற்று எண்ணிக்கை தொடர்ந்து நடைபெறும்.

இறுதியில் வாக்கு வித்தியாசம் குறைவாக இருக்கும் பட்சத்தில், தேவைப்பட்டால் அந்த கட்டுப்பாட்டு இயந்திரத்துடன் இணைக்கப்பட்ட விவிபாட் பதிவுகள் எண்ணப்படும். தபால் வாக்கு பிரச்சினை ஏதும் இருந்தால் அது தொடர்பாக மாவட்ட தேர்தல் அதிகாரி, தேர்தல் நடத்தும் அலுவலர் அல்லது தேர்தல் பார்வையாளர்கள்தான் முடிவெடுப்பார்கள். தேர்தல் வாக்கு எண்ணிக்கை தொடர்பான எந்தவித புகார்களும் அரசியல் கட்சிகளால் தரப்படவில்லை.

ஒவ்வொரு சுற்றிலும் தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும்அலுவலர்களால் இறுதி செய்யப்பட்ட விவரங்கள் மட்டுமே தேர்தல்ஆணையத்தால் பதிவேற்றம்செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது. தேர்தல் நடைமுறைகள் முடிந்த பின் முடிவு விவரங்களை, தலைமை தேர்தல் ஆணையர் குடியரசுத்தலைவரிடம் அளிப்பார். தேர்தல் நடத்தை விதிகள் நாளை ஜூன் 6-ம் தேதி வரை அமலில் இருக்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

போலீஸாருக்கு டிஜிபி பாராட்டு: வாக்கு எண்ணிக்கையின் போது அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் தமிழக போலீஸார் கவனமாக இருந்தனர். இதற்காக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகம் முழுவதும் சுமார் 1 லட்சம் போலீஸார் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்.

குறிப்பாக வாக்கு எண்ணும் மையங்கள், பொது மக்கள் அதிகம் கூடும் இடங்கள், சர்ச்சைக்குரியவர்களின் வீடுகள் மற்றும் அரசியல் கட்சி அலுவலகங்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. மேலும், கண்காணிப்பு பணியையும் போலீஸார் முடுக்கி விட்டிருந்தனர்.

சென்னையை பொறுத்தவரை வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி, கிண்டி அண்ணா பல்கலைக்கழகம், மெரினா கடற்கரையில் உள்ள ராணி மேரி கல்லூரியை சுற்றிலும் போலீஸார் கண்காணிப்பு பணிகளில் நிறுத்தப்பட்டனர். குறிப்பாக அங்கு 3 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பலத்த சோதனைக்கு பிறகேவாக்குச் சாவடிக்குள் செல்ல தகுதி படைத்தவர்கள் அனுமதிக்கப்பட்டனர். மேலும், வெடிகுண்டுகளை கண்டறியும் மெட்டல் டிடெக்கர் கருவி மூலமும் சோதனை நடத்தப்பட்டது.

தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டல், களப்பணி மற்றும்போலீஸாரின் கண்காணிப்பு காரணமாக அமைதியான முறையில் அனைத்து மையங்களிலும் வாக்கு எண்ணும் பணி நடைபெற்றதாக போலீஸார் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

இதேபோல், பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்ட அனைத்து போலீஸாருக்கும் டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் பாராட்டு தெரிவித்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here