பரங்கிமலை – பழவந்தாங்கல் இடையே ரயில் பாதையில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதால், மின்சார ரயில் சேவை நேற்று மாலை ஒன்னே கால் மணி நேரம் பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதியடைந்தனர்.
சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு வழித்தடத்தில் 200-க்கும் மேற்பட்ட மின்சார ரயில்கள் தினசரி இயக்கப்படுகின்றன. இந்த ரயில்களில் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் தினசரி பயணம் செய்து வருகின்றனர். அதிலும், காலை, மாலை வேளைகளில் மின்சார ரயில்களில் கூட்டம் அலைமோதும்.
இந்நிலையில், பரங்கிமலை – பழவந்தாங்கல் இடையே ரயில் தடத்தில் உயர்மட்ட மின்பாதையில் நேற்று மாலை 5.30மணிக்கு திடீரென பழுது ஏற்பட்டது. இதையடுத்து, தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.
உயர்மட்ட மின்பாதை: தொடர்ந்து, ரயில்வே அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் பேரில், ரயில்வே பொறியாளர்கள், பணியாளர்கள் அங்கு விரைந்து வந்து, உயர்மட்ட மின்பாதையில் ஏற்பட்ட பழுதை சரிசெய்யும் பணியில் ஈடுபட்டனர். அதேநேரம், கடற்கரை – தாம்பரம் நோக்கி செல்லும் மின்சார ரயில்கள் வழக்கம்போல இயக்கப்பட்டன.
இதற்கிடையில், பரங்கிமலை – பழவந்தாங்கல் இடையே ரயில்வே மின்பாதையில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு நேற்று மாலை 6.45 மணிக்கு சரி செய்யப்பட்டது. இதையடுத்து, தாம்பரம் – சென்னை கடற்கரை நோக்கி மின்சார ரயில் சேவை மீண்டும் இயங்கத் தொடங்கின. தொழில்நுட்ப கோளாறால், 1.15 மணி நேரம் வரை ரயில் சேவை பாதிக்கப்பட்டது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர்.